அ.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுங்கள் நிர்வாகிகளுக்கு கமல் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஐ.டி., அணி செயலர் கிருபாகரன், அ.தி.மு.க.,வில் இணைந்ததால், கடும் கோபமடைந்த கமல், அங்கிருந்து ஒருவரை இழுக்குமாறு, தன் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xy8utje3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், ம.நீ.ம., கட்சி தோல்வியடைந்தது. கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் உள்ளிட்ட பலர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட, ம.நீ.ம., தலைவர் கமல் பேச்சு நடத்தி வருகிறார். தேர்தலை எதிர்கொள்ள கமல் தயாராகி வரும் நிலையில், கட்சியின் சமூக ஊடக பிரிவான ஐ.டி., அணி செயலர் கிருபாகரன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்துள்ளார். இது, கமல் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தேர்தல் நேரத்தில், ஐ.டி., அணியின் பணி முக்கியமானது. அனைத்து கட்சிகளும், 'பேஸ்புக், எக்ஸ்' தளம், யு --- டியூப் போன்ற சமூக வலைதளங்கள், இணையதளங்களில் பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கவும், பல நுாறு பேரை வைத்துள்ளன. ம.நீ.ம.,வின் சமூக வலைதளங்களை கவனித்து வந்த கிருபாகரனை, தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க., வலை விரித்து இழுத்திருப்பது, கமல் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், மய்யத்தில் ஐ.டி., அணி நிர்வாகிகளாக இருப்போர் அனைவரும், கிருபாகரனால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் அ.தி.மு.க., வலை விரிக்கும் என்பதால், அடுத்தடுத்து சிலர் வெளியேறக்கூடும் என்ற அச்சம் ம.நீ.ம.,வில் காணப்படுகிறது. அதனால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்த கமல், பதிலடியாக, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரை தன் கட்சிக்கு இழுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளை வேகமாக செய்யும்படி, நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.