ஆத்துார்: தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வின், கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: பா.ஜ., ஆளும் மாநிலங்களை தவிர்த்து, மற்ற மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. தமிழக மக்களை, தொடர்ந்து வஞ்சிக்கும் செயலில், பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. பா.ஜ., செயல்படுத்தும் திட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணை போகிறது. அனைத்திந்திய அண்ணா தி.மு.க., என்று அக்கட்சியை சொல்ல மாட்டேன். 'அடிமை தி.மு.க.,' என்று தான் சொல்வேன். இந்த அடிமை தி.மு.க.,வுக்கு, நாங்கள் முடிவு கட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். இப்படி 'அடிமை தி.மு.க.,' என எம்.பி., மலையரசன் பேசிய பின், அவரை சந்தித்த பத்திரிகையாளர்கள் இதுகுறித்து, எம்.பி.,யிடம் கேட்டனர். அப்போது, 'நான், அ.தி.மு.க.,வைத்தான், அடிமை தி.மு.க., என குறிப்பிட்டேன். நான் தி.மு.க., குறித்து அப்படி பேசவில்லை' என்றார்.