உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ம.க., புகாரை ஒப்புக்கொண்ட அமைச்சர்: அன்புமணி விமர்சனம்

 பா.ம.க., புகாரை ஒப்புக்கொண்ட அமைச்சர்: அன்புமணி விமர்சனம்

சென்னை: 'பா.ம.க.,வின் குற்றச்சாட்டை, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா ஒப்புக் கொண்டுள்ளார்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., அரசு கூறுவது போல, 11.32 லட்சம் கோடி ரூபாய் முதலீடாக தமிழகத்துக்கு வரவில்லை; 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளிப் படுத்தினோம். ஆனால், பா.ம.க., குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நினைத்து, அவற்றை தொழில் துறை அமைச்சர் ராஜா ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அறிக்கையில், '2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 சதவீதம்; உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்களில் 16 சதவீதம் என வணிக உற்பத்தியை நிறுவனங்கள் துவங்கியுள்ளன' என கூறியுள்ளார். ஆனால், 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 23 சதவீத முதலீடுகள்கூட முழுமையாக வரவில்லை என்பதே உண்மை. கடந்த 2022 மே 11ல், 'ஹூண்டாய்' நிறுவனம், 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால், 500 கோடி ரூபாய் தான் முதலீடு செய்துள்ளது. தி.மு.க., அரசு கணக்குப்படி, அந்த ஒப்பந்தம் செயலாக்கம் பெற்று விட்டது. ஆனால், உறுதியளித்த முதலீட்டில், 2.5 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. அதுபோல, 16,000 கோடி ரூபாய் முதலீடு ஒப்பந்தம் செய்த 'வின்பாஸ்ட்' நிறுவனம், 4,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளது. அதாவது, ராஜா குறிப்பிடும் 23 சதவீத ஒப்பந்தங்களில், அரைகுறையாகவே முதலீடுகள் வந்துள்ளன. தொழில் துறை அமைச்சருக்கு, மாநில நலனில் அக்கறையும், நேர்மையும் இருக்க வேண்டும். அது இல்லாத ஒருவரால், முதலீடுகள் வராது; மோசடிகளும், பொய்களும் தான் வரிசை கட்டி வரும். தமிழகத்திற்கு அதிக முதலீடு வந்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். ஆனால், தி.மு.க., ஆட்சியில் அப்படி நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குறைகளை சுட்டிக் காட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை