உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவை செம்மொழி பூங்கா கட்டுமானத்தில் விதிமீறலா; கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர் நேரு நழுவல்

 கோவை செம்மொழி பூங்கா கட்டுமானத்தில் விதிமீறலா; கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர் நேரு நழுவல்

கோவை: கோவையில் செம்மொழி பூங்காவை, வரும் 25ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். அதனால், அவசர அவசரமாக கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல், அமைச்சர் நேரு புறப்பட்டுச் சென்றார். கோவை காந்திபுரத்தில் மாநகராட்சி சார்பில், ரூ.214 கோடியில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படுகிறது. கட்டுமான பணிகளை, தமிழக நகராட்சிகளின் நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின், நிருபர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேரு அளித்த பதில்:

செம்மொழி பூங்கா மொத்தம் 45 ஏக்கர் என்கிறீர்கள். இதில், பசுமை பரப்பு எவ்வளவு? மாநாடு மையம் 7 ஏக்கரில் கட்டப்படுகிறது. அலுவலக கட்டடம் தவிர மீதமுள்ள இடங்கள் பசுமை பரப்பு தான். பூங்கா முழுவதும் ஆங்காங்கே கான்கிரீட் கட்டடங்களாகவே இருக்கின்றனவே... பசுமை பரப்பு எவ்வளவு என சொல்லுங்கள்? அலுவலகம் மட்டுமே கான்கிரீட் கட்டடம். மற்றவை சின்ன சின்ன ஷெட் தாங்க. கடந்த முறை வந்தபோது, நான்கு பணிகள் நிலுவை இருப்பதாக கூறினீர்கள். அந்த வேலைகள் எப்போது முடிக்கப்படும்? இரண்டு நாட்களில் முடிந்து விடும். ஒரே ஒரு வேலை மட்டுமே பாக்கி உள்ளது. நுழைவாயில் பகுதியில் கான்கிரீட் போட்டிருக்கிறார்கள்; கல் பதிக்க வேண்டும். அவ்வளவுதான். இது தவிர, ஆடிட்டோரியம் வேலை செய்ய வேண்டியுள்ளது. பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுற்றுச் சூழல் துறை, மின்சாரத்துறையிடம் தடையின்மை சான்று பெறப்பட்டு விட்டதா. பொதுமக்கள் வந்து செல்லக் கூடிய இடம். அவர்களின் பாதுகாப்பு அடிப்படையில் சான்று பெற வேண்டியது முக்கியமல்லவா? இக்கேள்வியால் தடுமாற்றம் அடைந்த அமைச்சர் நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முகங்கள் மாறின. பதிலளிக்காமல் மற்றொரு நிருபரிடம் கேள்வி கேட்கச் சொன்னார் நேரு. அப்போது செந்தில்பாலாஜி குறுக்கிட்டு, ''இது, அரசு நிர்வாகம். முதல்வர் வந்து திறந்து வைக்கிறார். முறைப்படி இல்லாமல் முதல்வர் திறக்க மாட்டார். முழு விவரம் உங்களுக்கே தெரியும். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் கேட்கக் கூடாது,'' என, கோபமாக பேசினார். குறுக்கிட்ட அமைச்சர் நேரு, ''விடுங்க... விடுங்க... சான்று வாங்கிட்டுத்தான் திறப்போம். அப்படி நாங்களே திறந்தாலும், முதல்வர் வர மாட்டார். அனைத்து அனுமதி சான்றுகள் பெற்று, சட்டப்படி இருந்தால் மட்டுமே வருவார். அனைத்து சான்றிதழ்களும் வாங்கி விடுவார்கள்,'' என்று கூறி சமாளித்தார். வேலைகள் அவசர அவசரமாக நடக்கின்றன. இதுவரை செய்த கான்ட்ராக்டரோடு, கூடுதல் கான்ட்ராக்டர்கள் வேலை செய்து வருகிறார்கள். டெண்டர் நடைமுறை பின்பற்றவில்லையே...? நுழைவாயில் பகுதியில் கான்கிரீட் தளம், ரோடு போடும் வேலை என பல வேலைகள் இரவோடு இரவாக செய்யப்படுகின்றனவே... அவற்றின் தரம், டெண்டர், அதை எப்படி கண்காணிக்கிறீர்கள்...? வேலை மெதுவாக நடந்தால் ஏன் மெதுவாக நடக்கிறது என்கின்றீர்கள், வேகமாக நடந்தால் ஏன் வேலை செய்கின்றீர்கள் என கேட்கிறீர்கள். இவ்வளவு நாளாக மெதுவாக வேலை செய்து விட்டு, இப்போது அவசரப்படுவதேன்...? அவசியம் வந்துவிட்டதால், திறக்கிறோம். பணிச்சுமை அதிகமாகி விட்டதாக, இங்குள்ள அதிகாரிகள் பலரும் கூறுகிறார்களே... ஏங்க... சும்மா... எங்களையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்களே... இந்த பதிலை தொடர்ந்து, நிருபர்கள் 'ஒரு கான்ட்ராக்டர் மட்டுமின்றி, ஏகப்பட்ட கான்ட்ராக்டர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவசரப்படுத்துவதால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்த கான்ட்ராக்டரால் பணிகளை வேகமாக செய்ய முடியாததால், ஒப்பந்ததாரர் விலகி விட்டதாக கூறப்படுகிறதே...' என அடுக்கடுக்காக கேட்டனர். அதற்கு அமைச்சர் நேரு, ''ஏற்கனவே இருக்கும் ஒப்பந்ததாரரே பணி செய்கிறார். அவரும் இங்குதான் இருக்கிறார்,'' என நேரு பதிலளித்தபோது, அருகில் அமர்ந்திருந்த செந்தில்பாலாஜி, ''பேட்டியை முடித்துக் கொள்ளலாம்,'' என்றார். இதனால், அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கிளம்பினார் அமைச்சர் நேரு.

'முக்கிய பிரமுகர்களுடன்முதல்வர் கலந்துரையாடல்'

நிருபர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், ''பூங்காவை திறந்து வைத்த பிறகு, கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதல்வர் உரையாடும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. பூங்காவை டிச., 1 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றியதை விட, நுழைவு கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பூங்கா பராமரிப்பு பணியை ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளும்; மாநகராட்சி நிர்வாகம் கண்காணிக்கும். பூங்காவில் மீதமுள்ள பணிகள் இரு நாட்களில் முடிவடையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை