அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு தோல்வி பயத்தின் வெளிப்பாடு!
சென்னை: 'அனைத்து குடும்பத் தலைவியருக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வருவாய் துறை அமைச்சரின் அறிவிப்பு, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தின் வெளிப்பாடு' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவியருக்கும், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, வரும் ஜனவரி முதல் வழங்கப்படும்என்று, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவியருக்கும், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில், ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க., அரசுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான், இப்படியொரு அறிவிப்பை தி.மு.க., அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை என்பது, தி.மு.க.,வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு தான். ஆனாலும், தி.மு.க., அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வீழ்த்தப்படுவது உறுதி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தகுதியுள்ளவருக்கு தான் ரூ.1,000கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு, தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில், விண்ணப்பித்துள்ள அனைவர் விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர்கூட விடுபடாத அளவில் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. முதல்வரின் ஆலோசனைகளை பெற்று, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றே, விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதி அளித்தேன்.- சாத்துார் ராமச்சந்திரன், தமிழக அமைச்சர்