உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  துாத்துக்குடி, மீளவிட்டான் ஸ்டேஷன்களில் நவீன இன்டர்லாக்கிங் சிக்னலிங் அறிமுகம்

 துாத்துக்குடி, மீளவிட்டான் ஸ்டேஷன்களில் நவீன இன்டர்லாக்கிங் சிக்னலிங் அறிமுகம்

விருதுநகர்: மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட துாத்துக்குடி, மீளவிட்டான் ஸ்டேஷன்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய இன்டர்லாக்கிங் சிக்னலிங் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் இரு ஸ்டேஷன்களிலும் டிச., 15 முதல் 23 வரை யார்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. இக்கோட்டத்தில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய 'இன்டர்லாக்கிங் சிக்னலிங் சிஸ்டம்' இந்த இரு ஸ்டேஷன்களிலும் நடைமுறைக்கு வந்தது. அதாவது ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை ரயில் போக்குவரத்திற்காக 'கிளியர்' செய்யும் அமைப்பு, இன்டர்லாக்கிங் சிக்னல் மென்பொருளுடனேயே இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரயில்களின் பாதுகாப்பு, செயல்பாட்டு திறன் வழக்கமான அமைப்புகளை விட இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் கணினி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பு ரயில்களை எளிதாக கையாள உதவும். இரு ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 'லெவல் கிராசிங்' குகள் இம்முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

சீரமைப்பு

துாத்துக்குடி ஸ்டேஷனில் நீளமான ரயில்களை கையாளும் வகையில் முதல் பிளாட்பாரத்தின் நீளம் 595 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 552 மீ.,க்கு புதிய பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. 22 எல்.எச்.பி., வகை பெட்டிகள் கொண்ட ரயில்களை பராமரிக்கும் வகையில் 'பிட் லைன்' களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இன்ஜின்கள் ரயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறம் எளிதாக சென்று வர தனி தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மின்கம்பிகளை ஆய்வு செய்யும் சோதனை வாகனத்திற்கு தனி கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மீளவிட்டான் ஸ்டேஷனில் 'ஷண்டிங்' பயன்பாட்டிற்காக 750 மீ.,க்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களை கையாளும் வகையில் 'கான்கிரீட்' தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் நேர மாற்றம்

2026 ஜன., 1 முதல் விருதுநகர், மதுரை வழியாக தினமும் இயக்கப்படும் முத்துநகர் ரயில் (12694), துாத்துக்குடியில் இருந்து இரவு 8:40க்கு பதில் 9:05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:40க்கு பதில் 7:35க்கு சென்னை எழும்பூர் செல்லும். வியாழன், சனி தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் ரயில் (16766), துாத்துக்குடியில் இருந்து இரவு 10:50க்கு பதில் 11:40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:40க்கு வழக்கம் போல் மேட்டுப்பாளையம் செல்லும். மறுமார்க்கத்தில் இவ்விரு ரயில் நேரங்களில் மாற்றம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி