மேலும் செய்திகள்
அரசுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இறுதி கெடு
1 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அவகாசம் வேண்டும்
1 hour(s) ago
நடப்பது சாத்தான் ஆட்சி அல்ல
1 hour(s) ago
சென்னை : கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 31.93 கி.மீ., துாரத்திற்கும், கோவையில், அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை; உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை, 39 கி.மீ., துாரத்திற்கும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு, கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன், தமிழக அரசு அனுப்பியது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள், மதுரை மற்றும் கோவையில் ஆய்வை முடித்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. 'கடந்த 2017ம் ஆண்டு விதிகளின்படி, மக்கள் தொகை, 20 லட்சத்திற்கு மேலுள்ள நகரங்களில் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் மக்கள் தொகை, 15.84 லட்சம், மதுரையில், 15 லட்சம் தான்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பதிலாக, இந்த இரு நகரங்களிலும், தனி பாதையில் பஸ்கள் மட்டுமே இயக்கப்படும், பி.ஆர்.டி.எஸ்., போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையை தொடர்ந்து மதுரையில், 11,360 கோடி ரூபாயிலும், கோவையில், 10,740 கோடி ரூபாயிலும், மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை, மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம், 2024 பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. பின், மத்திய அரசு கேட்ட கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட அறிக்கை, 10 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், நிலம் கையகப்படுத்தும் பணியும் துவக்கப்பட்டது. ஆனால், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தர பிரதேச மாநிலம், கான்பூர், ஆக்ரா; மஹாராஷ்டிராவில் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில், 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருந்த போதிலும், அங்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதும், தமிழகத்திற்கு மறுத்திருப்பதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'திருத்தங்கள் செய்து அனுமதி தரணும்''கோயமுத்துார் நெக்ஸ்ட்' அமைப்பின் உறுப்பினர் சதீஷ் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி, வேறு திட்டங்கள் தயாரிக்க அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வந்துள்ளது. மோனோ ரயில் அல்லது ஸ்மார்ட் பஸ் போல் வேறொரு பொது போக்குவரத்து திட்டத்தை தயாரிக்கச் சொல்லியிருப்பதாக கேள்விப்பட்டோம். மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த கோவையை மத்திய அரசு, 2010ல் தேர்வு செய்து அறிவித்தது. 2011ல் எடுத்த மக்கள் தொகை 15.84 லட்சம். அதன்பின், மக்கள் தொகை கணக்கெடுக்கவில்லை. 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது கோவையின் மக்கள் தொகை, 20 லட்சத்தை கடந்து விட்டது. சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை, தொழில் நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் வந்து இங்கு வசிப்பவர்கள் மற்றும் நகருக்கு வந்து செல்வோரை கணக்கிட்டால், பல லட்சங்கள் தாண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மிக அவசியம் என்பதால், திட்ட அறிக்கையில் என்ன குறைகள் இருக்கிறதோ, அதை நிவர்த்தி செய்து, செயல்படுத்துவதற்கான வேலைகளை உடனடியாக துவங்க வேண்டும். அதற்கான அனுமதியை வழங்க, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago