| ADDED : பிப் 19, 2024 06:08 AM
மதுரை : ''மதுரையில், விளையாட்டை மேம்படுத்தும் வகையில், 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி, 8 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.மதுரையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அனைத்து ஊராட்சிகளுக்கும் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. திட்டத்தை துவக்கி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:இத்திட்டம் வாயிலாக, 12,618 ஊராட்சிகளுக்கு, 86 கோடி ரூபாயில், 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதனால், விளையாட்டுத் துறையில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படும். இத்துறையில் கருணாநிதி பெயரில் துவக்கப்பட்ட முதல் திட்டம் இது. முதல்வர் ஸ்டாலின் திட்டங்களால், விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 'கேலோ இந்தியா' உள்ளிட்ட சர்வதேச போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. சி.ஐ.ஐ., உள்ளிட்ட அமைப்புகள், பல விருதுகளை தமிழகத்திற்கு வழங்கி வருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரையில், 6 கோடி ரூபாயில் ஒலிம்பிக் அகாடமி, 8 கோடி ரூபாயில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மதுரையில், 5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையத்தையும் உதயநிதி துவக்கி வைத்தார்.