ஆன்லைன் கடன் வாங்கியவர் ஆபாச டார்ச்சரால் தற்கொலை: முறையாக பணம் செலுத்தியும் பொறியாளருக்கு சோகம்
திருமங்கலம்: அலைபேசி வாயிலாக 'ஆன்லைன்' கடன் வாங்கிய மதுரை இன்ஜினியர், முறையாக பணம் கட்டி வந்த போதும் கூடுதல் பணம் வசூலிக்கும் நோக்கில் அவரது படத்தை ஆபாசமாக 'மார்பிங்' செய்து உறவினர்களுக்கு அனுப்பியதால் விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த சரவணன் 21, இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் கட்டட கான்ட்ராக்ட் வேலை செய்து வந்தார். சில மாதங்களாக மதுரையில் வேலை செய்து வருகிறார். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அதனை முறையாக செலுத்திவந்த நிலையில் கூடுதல் பணம் வசூலிக்கும் நோக்கில் ஆன்லைனில் கடன் கொடுத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது அலைபேசியில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பியதோடு பெற்றோருக்கும் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் சரவணனின் அப்பா, அவருக்குத் தெரியாமல் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ரூ.13 ஆயிரம் அனுப்பி உள்ளார். அதன் பின்னும் வெறி அடங்காத அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆபாச படங்களை தொடர்ந்து அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்ததோடு, ஆபாச படமும் அனுப்பப்பட்டதால் விரக்தி அடைந்த அவர், நான்கு நாட்களுக்கு முன்பு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதாரண தற்கொலை வழக்காக விசாரித்த கூடக்கோவில் போலீசார், தற்போது பெற்றோர் புகாரின் பேரில் கடன் செயலி நிறுவனம் குறித்து விசாரிக்கின்றனர்.