உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குறுவையில் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு நெல் கொள்முதல்

 குறுவையில் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு நெல் கொள்முதல்

சென்னை : தமிழக விவசாயிகளிடம் இருந்து, குறுவை சீசனில், 15 லட்சம் டன் நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளது. இதற்காக, 1.93 லட்சம் விவசாயிகளுக்கு, அரசு, 3,744 கோடி ரூபாய் பட்டுவாடா செய்துள்ளது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. இதற்காக விவசாயி களுக்கு, மத்திய - மாநில அரசுகளின் சார்பில், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த, 2025 செப்., 1ல் துவங்கிய நெல் கொள்முதல் சீசன், இந்த ஆண்டு ஆக., 31ல் முடிவடைகிறது. இதில் குறுவை நெல் சாகுபடி, கடந்த ஆண்டு ஜூன், ஜூலையில் துவங்கி, அக்டோபரில் முடிவடைந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல், 1,946 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு சீசனில், கடந்த டிச., வரை, 1.93 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு, 3,744 கோடி ரூபாயை, மத்திய - மாநில அரசுகள் பட்டுவாடா செய்து உள்ளன. முந்தைய சீசனில் டிச., வரை, 5.34 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, இந்த சீசனில் டிச., வரையிலான காலத்தில், கூடுதலாக, 9.66 லட்சம் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் பொங்கலுக்கு பின், சம்பா நெல் அறுவடை துவங்க உள்ளதால், நெல் கொள்முதல் மிகவும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்