| ADDED : ஜன 07, 2024 04:48 AM
புதுச்சேரி; போட்டி மிகுந்த உலகத்தில், நம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கவர்னர் தமிழிசை கூறினார்.புதுச்சேரி, ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா இறுதி போட்டியை துவக்கி வைத்த சிறப்பு விருந்தினர் கவர்னர் தமிழிசை பேசியதாவது:இங்கே பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு எனது பாராட்டுகள். வெற்றி எப்பொழுதும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பங்கு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அதனால் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க்கையில் கல்வி மிக முக்கியம் என இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்கள் கூறுகிறார்கள். சில நாடுகள் இந்தியாவிற்கு எதிரான பயணத்தை மேற்கொள்கிறது. ஆனால் அந்த நாடுகளில் கூட விளையாட்டில் வெற்றி பெற்று நம் தேசிய கொடி ஏற்றப்படுவது என்பது மாணவர்களின் சாதனை. சில நேரங்களில் தலைவர்கள் செய்ய முடியாததை கூட மாணவர்கள் விளையாட்டின் மூலம் செய்கின்றனர். இந்தியா வெற்றி பெற்றுவிட்டது என்பது எந்த அளவிற்கு எனக்கு மகிழ்ச்சியை தருகிறதோ, அதே அளவிற்கு நமது தேசியக் கொடியானது அந்த அரங்கில் பறக்கவிடும் பொழுது மகிழ்ச்சியை தரும்.போட்டியில் கலந்து கொள்ளும்போது ஒரு ஆர்வம் ஏற்படும். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அது அனுபவத்தை தரும். வெற்றி பெறுகிறோமோ இல்லையோ வாய்ப்புகள் வரும்போது போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி; இல்லை என்றால் அது அனுபவத்தை பெற்று தந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு திறமையோடு தான் பிறந்திருக்கிறார்கள். அதனை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.போட்டியில் கலந்து கொண்டு கிடைக்கும் பரிசை பற்றி எப்போதும் கவலைப்படக்கூடாது. சில நேரங்களில் என் குடும்பத்தின் பின்புலத்தின் காரணமாகவே நான் அடைந்த வெற்றிகள் பேசப்படும். நீங்கள் மருத்துவம் தானே படித்தீர்கள். பிறகு எப்படி இவ்வளவு நன்றாக தமிழ் பேசுகிறீர்கள்? தமிழ் கற்றதனால் பேசுகிறீர்களா? என்று என்னிடம் கேட்பார்கள். 'என்னை தமிழ் பெற்றதனால் நான் பேசுகிறேன்' என்று பதில் சொல்வேன்.நான் சிறுவயதில் மேடைப் போட்டிகளில் கலந்து கொள்வேன். முதல் பரிசுக்கு தேர்வாவேன். ஆனால் என் பெற்றோரை பற்றி நடுவர்களுக்கு தெரிய வரும்போது நான் வாங்கிய முதல் பரிசினை அழித்து விடுவார்கள். ஏனென்றால் அவருடைய பெண்ணாக இருக்கும்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக பேசியிருக்கலாம் என்று அவர்கள் நினைப்பதுண்டு.இவரின் மகள் என்பதன் காரணமாக பல நேரங்களில் எனக்கு வெற்றி வாய்ப்புகள் தவறிப் போயிருக்கிறது. ஏனென்றால் பல நேரங்களில் நான் கடின உழைப்பின் மூலம் மேலே வரும்போது அது எப்பொழுதும் பெற்றோர்களை வைத்தே கட்டமைக்கப்படும். ஆனால், ஒரு முறை என் தந்தையே என்னை பற்றி பெருமையாக சொல்லும்போது, இவரின் மகள் என்னும் நிலையை தாண்டி; இவரின் தந்தை என்னும் நிலையை அடைந்திருப்பதில் எனக்கு பெருமை என்று கூறி இருக்கிறார்.இது போட்டி மிகுந்த உலகம். நம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உலகம் சவால்கள், போட்டி நிறைந்ததாக இருக்கிறது. நம் ஓட்டத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டால் நம்மை தாண்டி ஓடுவதற்கு பலர் காத்திருக்கிறார்கள்.அதிகாலையில் எழுந்து இரவு விரைவாக உறங்க வேண்டும். படிப்பதை காட்டிலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்து யோகா செய்ய வேண்டும். அதனால், படிப்பது மனதில் ஆழமாக பதியும். தேர்வில் சிறப்பாக செயலாற்ற முடியும்.'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது' என்பது போல உங்களை பயிற்சி கொடுத்து பழக்க வேண்டும். வாழ்க்கையில் உண்மையாக, நேர்மையாக இருப்பவர்களுக்கு எப்போதும் சிக்கல்கள் வராது. பாரதியார் கூறுவதைப் போல ஞானச் செருக்கு இருக்க வேண்டும்.என்னைப் போன்றவர்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு நேர்மையாக இருந்தது தான் காரணம். அதிகமாக பணம் கட்டி தனியார் பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளுமைகளாக மாறமுடியும் என்கிற மாய நிலை இருக்கிறது. ஆனால் இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்கள் நாம் திறமையாக படித்தால் முன்னேற முடியும் என்பதற்கு சான்றாக இருக்கிறார்கள். பெற்றோரின் உறுதுணை இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. நேரத்தை வீணடிக்காமல், இன்று என்ன செய்ய வேண்டும் என்கிற தினசரி திட்டமிடுதல் வேண்டும்.கிடைக்கும் நேரத்தில் படித்து நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்பது பழமொழி. ஆகவே, படிப்புடன் வேறு சில கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.நான் படிக்கும் பொழுது ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும் தையல், பொம்மைகள் தயாரித்தல் போன்றவைகளை கற்றுக் கொள்வேன். நான், என் அம்மாவிடம் நான் மருத்துவராகவில்லை என்றாலும் வேறு ஏதாவது வேலை செய்து கொள்வேன் என்று கூறுவேன். எனவே அத்தகைய திறமை நம்மிடம் இருக்க வேண்டும்.உங்களது மகிழ்ச்சியை எதற்காகவும் தொலைக்காதீர்கள். காய்கறி, பழங்கள் உண்டு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்றில் நாம் தப்பித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது உணவு பழக்கம் என்று ஆய்வு கூறுகிறது.வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் நல்லதென்று நினைக்கக்கூடாது. நம் நாட்டில் உள்ள நல்ல உணவுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். நவீனமாக மாறுங்கள். மேற்கத்திய கலாசாரவாதியாக மாறாதீர்கள்.கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறேன். ஆனாலும் அங்கே வேலை செய்யாமல் நான் பிறந்த பாரத நாட்டில் செய்வதுதான் எனக்கு பெருமை என்று கூறியிருக்கிறேன். தமிழகத்திற்கு எப்போதெல்லாம் வருகிறேனோ அப்போதெல்லாம் முழு சக்தியை பெறுகிறேன் என்று பிரதமர் கூறுவார். அதைப்போல எப்போதெல்லாம் மாணவர்களை நான் சந்திக்கிறேனோ அப்பொழுது நான் முழு சக்தியை பெறுகிறேன்.இவ்வாறு கவர்னர் பேசினார்.