| ADDED : டிச 05, 2025 05:43 AM
தென்காசி: விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை, அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடுகின்றனர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொத்தையை சேர்ந்தவர் இசக்கிபாண்டி, 30; இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவர் தென்காசி மாவட்டம், நெட்டூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், இசக்கிபாண்டி நண்பருடன் நெட்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்தார். தகவலில், அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் முருகன் உட்பட இருவர், இசக்கிபாண்டியை கண்டித்து அனுப்பினர். அங்கிருந்து கிளம்பி சென்ற இசக்கிபாண்டி, மீண்டும் அவரது நண்பருடன் புறக்காவல் நிலையம் சென்று, முருகனிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி தப்பினார். அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆலங்குளம் போலீசார், இசக்கிபாண்டி, அவரது நண்பரை தேடுகின்றனர்.