சொத்து வரி உயர்வு: பழனிசாமி--நேரு மோதல்
சென்னை:'திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்ற மறுத்த மேயருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம் சொத்து வரி உயர்வுக்கு பழனிசாமியே காரணம் என, அமைச்சர் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.பழனிசாமி: திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இவற்றை கட்டாவிட்டால் அபராத வரி, வாடகை கட்டடங்களுக்கு, புதிதாக ஜி.எஸ்.டி., வரி என, கடுமையான வரி உயர்வுகளை, தி.மு.க., அரசு சுமத்தி வருகிறது.இதை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்ற, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதை தி.மு.க., மேயர் ஏற்க மறுத்துள்ளார். மேலும், அனைத்து தீர்மானங்களையும், ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி, கூட்டத்தை முடித்துள்ளனர்.ஜனநாயக முறையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை, காவல் துறையை ஏவி, தி.மு.க., அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட, அனைத்து வரிகளையும் திரும்பப் பெற வேண்டும்.அமைச்சர் நேரு: திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில், சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராக, போராட்ட நாடகத்தை அ.தி.மு.க., நடத்தி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுதோறும், சொத்து வரியை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்தபோது, அதை ஏற்றுக் கொண்டவர் பழனிசாமி. திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021 - -26 வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் மானியம் 4.36 லட்சம் கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்படும், 'தூய்மை இந்தியா திட்டம்' , 'அம்ரித் 2.0 திட்டம்' ஆகியவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்படாது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்து, உள்ளாட்சி அமைப்புகளை திவாலாக்கிய பழனிசாமி, அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்கள் கட்சியின் கலவர ஆய்வு களேபரங்களை மறைத்து, திசை திருப்ப, மக்கள் மீது அக்கறை உள்ளதை போல், நீலிக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.