| ADDED : ஆக 10, 2024 05:32 PM
கோவை: ''வெற்றியை ஜீரணிக்க கற்றுக்கொண்டால், தொடர்ந்து சாதிக்க முடியும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் பிரிவு, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள் மற்றும் ஷாம்பவி சம்கல்ப் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், 'பாரதத்தை கட்டமைக்க - 2047 நோக்கி பயணம்' எனும் தலைப்பில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நடந்தது. கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்று தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கனவு இருந்தால் மலையை கூட நகர்த்தலாம். ஒரு விசயத்தை சாதிக்க வேண்டும் என, உறுதி எடுத்து விட்டால், எதுவும் உங்களை நிறுத்தாது. எதையும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒரு உத்வேகம் இருக்க வேண்டும். சொந்த வாழ்வையும், பணியையும் ஒன்றாக நடத்திச் செல்ல வேண்டும். வெற்றியை ஜீரணிக்க கற்றுக்கொண்டால், தொடர்ந்து சாதிக்க முடியும். வெற்றியை தலையில் ஏற்றிக் கொண்டால், அது உங்களை பாதிக்கும். அனைவரிடமும் அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும். வெற்றிக்கு தனிப்பட்ட நபர் மட்டும் காரணமல்ல. அனைவரையும் குடும்பமாக பார்க்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நமக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டும். அப்போது தான் கற்றுக்கொள்ள முடியும். புத்தகங்களை வாசிக்க வேண்டும். தொடர்ந்து உழைக்கும் போது வாய்ப்புகள் தேடி வரும். ஒழுக்கம் வாழ்வில் முக்கியமான ஒன்று. தினமும் கோவிலுக்கு போக வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு விசயத்தையும் பார்க்கும் கோணம் மாற வேண்டும். அடுத்தவர்களுக்கு செய்யும் சேவையும் இறை தன்மையானது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்மையாக நாட்டுகாக உழைக்கின்றனர். எந்த ஒரு விசயத்தையும் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். எதைப்படிக்க வேண்டும் என, தெரிந்து படிக்க வேண்டும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். இலக்கை அடையும் வரை எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. சுயகட்டுப்பாடு அவசியம். நேரத்தை வீணாக்கும் தேவையில்லாத விசயங்களில் ஈடுபடக்கூடாது. நாம் தான் நமக்கு நண்பனாகவும், எதிரியாகவும் இருக்க முடியும். உலகவில் இந்தியா தனித்து வளர்ந்து கொண்டுள்ளது. வரும், 2047 ல் வளர்த்த நாடாக வேண்டியுள்ளது. அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களை கட்டமைப்பதில் பிரதமர் பெரும் பங்கு வகிக்கிறார். நீங்கள் தனிமனிதன் இல்லை. நாட்டின் சொத்து. அப்படி எனில் நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வது உங்கள் கையில் உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.