திண்டிவனம்,:திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் திடீரென ரகசியமாக சந்தித்து பேசியது, அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் சமீபத்தில் நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், 2024 லோக்சபா தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடாமல், கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும், யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்ய நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மறைமுக பேச்சு
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., உடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இந்த முறை பா.ஜ.,வுடன் கூட்டணியா அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா என்பது குறித்து இதுவரை அறிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றன.இச்சூழலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க., அறிவித்துள்ள நிலையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டுவர, அ.தி.மு.க., மறைமுகமாக பேச்சில் ஈடுபட்டு வருகிறது.கடந்த முறை அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வை கொண்டு வந்ததில், திண்டிவனத்தை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முக்கிய பங்குவகித்தார்.தற்போதும், பொதுச்செயலர் பழனிசாமி உத்தர வின் பேரில், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம், பா.ம.க., நிறுவனர் ராமதாசை,ரகசியமாக சந்தித்துஆலோசனை நடத்தி உள்ளார். தொகுதி பங்கீடு
அப்போது, கூட்டணியை உறுதி செய்வது குறித்தும், தொகுதி பங்கீடுகுறித்தும் பேசியதாககூறப்படுகிறது. த.ம.கா., தலைவர் வாசன் பா.ம.க.,வை பா.ஜ., கூட்டணியில் சேர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியுடன் டில்லியில் தனியாக பேச்சு நடத்தியுள்ளார். இந்த சூழலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், பா.ம.க., நிறுவனர் ராமதாசை ரகசியமாக சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியிருப்பதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.