சென்னை: சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு வினியோகம் செய்ய, எஸ்.ஐ.ஆர்., படிவம் அச்சடித்து இருப்பதும், அவரிடம் நம் நாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் என, சகல விதமான ஆவணங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவர், 2019ல், சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து, சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இவர், 2021ல், விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்றார். அவரை, தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் தங்கி உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உமா காந்தன் வகுத்து தந்த திட்டத்தின்படி, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இறந்து போன ஒருவரது வங்கி கணக்கில் இருந்து, தங்கள் அமைப்புக்கு, 42.28 கோடி ரூபாயை மாற்ற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா தொடர்பான வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். தற்போது, அவருக்கு வினியோகம் செய்ய, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான, எஸ்.ஐ.ஆர்., படிவம் அச்சடித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்பது குறித்து, தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அது பற்றி கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவாக, தற்போது அவருக்கான எஸ்.ஐ.ஆர்., படிவமும் தயாராக இருந்துள்ளது. லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம், ஓட்டுநர் உரிமம், நம் நாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு என, சகல விதமான ஆவணங்களும் உள்ளன. அனைத்தையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.