உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டெட் முதல் தாள் தேர்வு: 14,958 பேர் ஆப்சென்ட்

 டெட் முதல் தாள் தேர்வு: 14,958 பேர் ஆப்சென்ட்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், 14,958 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதேநேரத்தில், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' எனும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அந்த வகையில், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், 'டெட்' தேர்வுகளை நடத்துகிறது. இந்தச் சூழலில், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலாவதற்கு முன், பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும், 'டெட்' தேர்வு எழுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் கடந்த செப்., 1ல் தீர்ப்பு வழங்கியது. இது, நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், நடப்பாண்டுக்கான, 'டெட்' தகுதித் தேர்வு இம்மாதம், 15, 16ம் தேதிகளில் நடக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. அதனால், டெட் முதல் தாள் தேர்வுக்கு, ஒரு லட்சத்து 7,370 பேர்; இரண்டாம் தாள் தேர்வுக்கு, 3 லட்சத்து 73,438 பேர் என, மொத்தம், ௪ லட்சத்து 80,808 பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுதும், 387 தேர்வு மையங்களில், 'டெட்' முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. மொத்தம், 92,412 பேர் தேர்வு எழுதினர். 14,958 பேர் தேர்வு எழுத வரவில்லை. 'டெட்' முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது என, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். கணிதம், தமிழ் தொடர்பான வினாக்கள், பள்ளி புத்தகங்களில் இருந்து அதிகம் கேட்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கான உளவியல் கல்வி சார்ந்த வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் கூறினர். இன்று தமிழகம் முழுவதும், 1,241 தேர்வு மையங்களில், 'டெட்' இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை