UPDATED : ஜன 01, 2024 03:45 AM | ADDED : ஜன 01, 2024 03:44 AM
உ.பி.,யில் உள்ள அயோத்தி ராம் ஜென்ம பூமியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோவில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க உலகமே ஆர்வம் கொண்டுள்ளது.அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் ராமர் பக்தர்கள் தந்த தரும் நன்கொடையைக் கொண்டே கோவில் கட்டுமானப்பணிகள் நடந்துவருகிறது இதன் சிறப்பாகும்.2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி . பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். அப்போது முதலே கட்டுமானப்பணிகள் வேகமெடுத்தது.ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் ரூ.2000 கோடிக்கும் அதிகமாக செலவில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிேஷகம் காணவிருக்கும் நிலையில், கட்டுமானப்பணிகள் முழுவேகம் எடுத்துள்ளது.சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாது இந்த அறப்பணியெனும் அரும்பணியின் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
ஏழடுக்கு பாதுகாப்பில் கட்டப்பட்டுவரும் இந்த கோவிலின் உள்ளே யாராலும் உள்ளே போய்விடமுடியாது கட்டுமான பொருட்களே பல கட்ட பாதுகாப்பிற்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.இந்த நிலையில் இதுவரை நடந்துள்ள கோவில் கட்டுமானப்பணிகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்குவதற்காக முதன்முறையாக கடந்த 26 ஆம் மீடியா டூர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அறக்கட்டளை தலைவர் சம்பத்ராய் தலைமையிலான உறுப்பினர்கள் நடந்துவரும் பணிகள் குறித்து விளக்கினர்.இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.தமிழகக் கோவில்கள் எதை எடுத்துக் கொண்டாலும் அழகிய சுற்றுச்சுவர் கொண்டிருக்கும் அந்த தமிழ்நாட்டு கோவில் பாணியில் ராமர் கோவில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.சென்னை ஐஐடி.,க்கு இதில் பெரும்பங்கு உண்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கப்போகும் இந்த கோவிலுக்கு தேவையான அஸ்திவாரம் அவர்களது ஆலோசனையின் அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது.
தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்துள்ள இந்தக் கோவில் . கற்பனையில் நினைத்திருந்ததைவிட மிகப்பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.கோவில் மட்டுமல்ல அயோத்தியே புதுவண்ணம் பூசிக்கொண்டுள்ளது.தங்கள் ஊர் உலக வரைபடத்தில் முக்கியத்துவம் பெற்றுவிட்டதை அறிந்து அங்குள்ள ஒவ்வொரு மக்களும் ராமர் கோவில் குறித்து பெருமிதம் கொண்டுள்ளனர்.