உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயிடம் நல்ல குணம் உள்ளது செல்லுார் ராஜூ கண்டுபிடிப்பு

விஜயிடம் நல்ல குணம் உள்ளது செல்லுார் ராஜூ கண்டுபிடிப்பு

மதுரை:''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது. போலீசார் மோசமாக செயல்படுகின்றனர்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: மதுரை விளாங்குடியில் கட்சிக்கொடி ஏற்ற போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். உருட்டல் மிரட்டல்களை வைத்து அ.தி.மு.க.,காரனை பணிய வைக்க முடியாது. நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை ஏற்கனவே பார்த்தவர்கள். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போலீசாரை கண்ணியத்துடன் நடத்தினோம். மதுரை தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை டூ-வீலரில் சென்ற ஒருவர் 'ஈவ் டீசிங்' செய்துள்ளார். பள்ளிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்ற ஆசிரியையை பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து வெட்டி உள்ளனர். அந்த அளவுக்குத்தான் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகவும் கேவலமாக உள்ளது. 'ஆட்சி நிர்வாகம் சரியில்லை' என பலமுறை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தி.மு.க., தலையில் கொட்டி உள்ளது. லேட்டஸ்ட்டாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சி.பி.ஐ., வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக போலீசார் மோசமாக செயல்படுகின்றனர். தற்போது தமிழகத்தில் மிட்டாய் வடிவில் போதை மாத்திரைகள் விற்கப்படுகின்றன. கூல் லிப் பயன்பாடு அதிகம் உள்ளது.'எந்தக் கொம்பனும் இந்த ஆட்சியை குறை சொல்ல முடியாது' என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நீதிபதி சொல்லிவிட்டாரே. விஜய் என்ற இளைஞன், ‛எம்.ஜி.ஆர்., செய்தது போல' கட்சி துவங்கி உள்ளார். இப்போது உள்ள நடிகர்களிடம் இல்லாத நல்ல குணம் விஜயிடம் இருக்கிறது. வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன் போர்க்குணம் மிக்கவர். அவரை தி.மு.க.,வினர் மிரட்டவோ, உருட்டவோ முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி