சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சியால், அடுத்த மூன்று நாட்களுக்கு, தமிழம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்த, நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு, 55 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசும். இது, அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.