சென்னை:''லோக்சபா தேர்தல் கூட்டணியை, இரண்டு நாளில் அறிவிப்பேன்,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: கூட்டணி கட்சிகளுடன் பேசி விட்டு, அடுத்த இரண்டு நாட்களில், உங்களை மீண்டும் சந்திக்கிறேன்; அப்போது, எல்லா தகவல்களையும் கூறுகிறேன்.எங்கள் கட்சியில் லோக்சபா தேர்தல் பணிகள் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கின்றன. கூட்டணி கட்சிகள் இடையே நடக்கும் பேச்சு குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் நிச்சயமாக கூறுவேன். காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சு குறித்தும், இரண்டு நாட்களில் கூறுவேன்; இப்போது வேறு எதுவும் கூறக்கூடாது. இவ்வாறு கமல் கூறினார்.இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் கமல் நிச்சயம் இணையப் போவதாகவும்; அங்கு அவருக்கு இரு தொகுதிகள் கொடுக்கப் போவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக செய்தி பரவி இருக்கிறது.கூடவே தி.மு.க., கூட்டணியில் காங்.,குக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து, ம.நீ.ம., கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்றும், கமல் கட்சி சார்பில் இரு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் ம.நீ.ம.,த்தின் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடாமல், காங்.,கின் கை சின்னத்தில் போட்டியிடுவர் என்றும் செய்திகள் பரவியுள்ளன.இது தொடர்பாக, நடிகர் கமல் மற்றும் ராகுல் ஏற்கனவே பேசி முடித்து விட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
இரு தொகுதிகள் வேண்டும்!
ம.நீ.ம., கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க., வி.சி., மற்றும் இடதுசாரிகளுக்கு, மொத்தமாக 3 சதவீத ஓட்டுக்கள் தான் உள்ளன. ஆனால், அவர்களுக்கு தி.மு.க., கூட்டணியில் எட்டு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.ஆனால், ம.நீ.ம., கட்சி தனித்து போட்டியிட்டு, 3 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருக்கும்போது, ஒரு தொகுதி கொடுத்து எங்களை சமாதானப்படுத்த நினைக்கின்றனர். இரு தொகுதிகளாவது கொடுத்தால் தான், கூட்டணியில் இடம் பெற முடியும். அதற்காக, மதுரை, தென் சென்னை, கோவை உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இரண்டை ஒதுக்குமாறு தி.மு.க., தலைமையிடம் கேட்டுள்ளோம்.