சென்னை:''கல்பாக்கம் விரைவு ஈனுலை திட்டம் குறித்து, தி.மு.க., தலைவர்கள் தவறான கருத்தை முன்வைக்கின்றனர். இது, அரசின் கருத்தா என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஊழல் என்ற வார்த்தை, எல்லா இடத்திலும் பரவியிருக்கிறது. அதற்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.இதைத்தான் பிரதமர் மோடி தன் பேச்சில் குறிப்பிட்டார். சென்னையை குப்பை நகரமாகவும், பாதுகாப்பற்ற நகரமாகவும் மாற்றியுள்ளனர். போதைப் பொருள் விவகாரத்தில், பிரதமர் மோடி ஆதங்கத்தின் அடிப்படையில் பேசினார்.மத்திய அரசு, நாட்டின் எல்லையை தீவிரமாக கண்காணிப்பதால் தான், குஜராத் கடலில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தி.மு.க., தலைவர்கள், கல்பாக்கம் விரைவு ஈனுலை குறித்து, மக்களிடம் தவறான கருத்தை முன் வைக்கின்றனர். இது, அரசின் கருத்தா, தன் கருத்தா என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும்.இந்தியா, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. இதற்கு அதிக எரிபொருள் தேவை. காற்றாலை, நீர் என, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை நோக்கி மோடி அரசு செல்கிறது.அணு உலையில், 'யுரேனியம் 235' எரிபொருளில் அணு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷ்யா, 'தோரியம், யுரேனியம் - 238' எரிபொருளை கொண்டு முன்மாதிரி விரைவு ஈனுலையில் மின்சாரம் தயாரிக்கிறது. இதன் வாயிலாக எவ்வளவு எரிபொருள் எரிக்கிறோமே, அதை விட அதிகமாக எரிபொருள் உற்பத்தி செய்யக் கூடியது. உலகின் பல நாடுகள் முயற்சி செய்தன; ரஷ்யா மட்டும் செயல்படுத்தியது. தற்போது, இந்தியா சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. இன்று, நம் நாட்டு விஞ்ஞானிகள் கல்பாக்கத்தில், 500 மெகா வாட் திறனில் விரைவு ஈனுலையில், 'கோர் லோடிங்' அதாவது மத்திய பகுதியில், எரிபொருள் நிரப்பி உள்ளனர். கல்பாக்கம் அணு உலை, பல ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. யுரேனியம் எரிபொருள் நம் நாட்டில் இல்லை. கன்னியாகுமரி, நாகர்கோவிலில் தோரியம் கிடைக்கிறது. இந்திய எரிபொருள், கல்பாக்கம் ஈனுலையில் பயன்படுத்தப்படும்.இதற்கு, சீன கொடி போட்ட தி.மு.க.,காரர்களுக்கு என்ன பிரச்னை; ஏன் தடுக்கின்றனர்? கல்பாக்கம் மின் திட்டத்தால் பாதுகாப்பற்ற சூழல் இல்லை. போதைப் பொருளால் தான் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.இப்படி தான், 'ஸ்டெர்லைட்' ஆலை மூடப்பட்டது. அதனால், காப்பர் விலை உயர்ந்து விட்டது. அதை அதிகம் ஏற்றுமதி செய்த நாம், இன்று இறக்குமதி செய்கிறோம். இதனால், சீனாவுக்கு தான் பலன். ஆட்சியில் உள்ள தி.மு.க., இதுபோன்று பேசுவது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.