உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க முடியாதது ஏன்? அமித் ஷாவிடம் மோடி வருத்தம்

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க முடியாதது ஏன்? அமித் ஷாவிடம் மோடி வருத்தம்

சென்னை: தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க முடியாதது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம், பிரதமர் மோடி தன் வருத்தத்தை வெளிப்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ல், மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பின், நாடு முழுதும் தனது செல்வாக்கை பா.ஜ., விரிவுபடுத்தி வருகிறது. திரிபுரா, ஒடிஷா போன்ற மாநிலங்களில் கூட, முதல் முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்தது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.,வால் வலுவான கூட்டணியை கூட அமைக்க முடியவில்லை.

எட்டு மாதங்கள்

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனி அணிகளாக போட்டியிட்ட அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், வரும் சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ளன. கூட்டணியை அறிவித்து எட்டு மாதங்கள் கடந்தும், எந்த கட்சியும் வரவில்லை. கூட்டணியில் ஏற்கனவே இருந்த பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் கூட திரும்பி பார்க்கவில்லை. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, பா.ஜ., தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவை, கடந்த செப்டம்பரில் அமித் ஷா அமைத்தார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், தமிழக கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்திய அனுபவம் உள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை தமிழக பொறுப்பாளராக அமித் ஷா நியமித்துள்ளார். அவரும் சென்னை வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். 'தி.மு.க.,வை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்; அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்த பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணியிலாவது சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தியும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விடாப்பிடியாக மறுத்து வருகிறார். இதுபோல, அப்பா -- மகன் மோதலால் பா.ம.க., பிளவுபட்டுள்ளதும், தி.மு.க., கூட்டணிக்கு செல்ல தே.மு.தி.க., விரும்புவதும், அ.தி.மு.க., - பா.ஜ., அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், தமிழக கூட்டணி நிலவரம் குறித்து அமித் ஷா மற்றும் பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரிடம் பிரதமர் மோடி விசாரித்துள்ளார். அப்போது, வலுவான போட்டியில் தமிழக தேர்தல் களம் இருக்கும் நிலையில், தி.மு.க., அணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடியாத நிலை குறித்து, பிரதமர் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பழனிசாமி பிடிவாதம்

இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது: கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., கூட்டணி, 18 சதவீத ஓட்டுகளுடன், இரண்டு இடங்களில் வென்றது. இந்த கூட்டணியை தக்க வைத்திருந்தால், 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம். அந்த வாய்ப்பை பா.ஜ., தவற விட்டுவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், முழு பதவிக்காலமும் அ.தி.மு.க., ஆட்சி தொடர மத்திய பா.ஜ., அரசே காரணம். அதன் பலன் பா.ஜ.,வுக்கு கிடைக்கவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அமித் ஷா கூறியபடி தினகரனின் அ.ம.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்திருந்தால், குறைந்தபட்சம் தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதையாவது தடுத்திருக்கலாம். ஆனால், பழனிசாமியின் பிடிவாதத்தால், தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இதை சுட்டிக்காட்டி, பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணியில் சேர்க்க அமித் ஷா வலியுறுத்தியும் பழனிசாமி கேட்கவில்லை. இதனால், வலுவான கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, பிரதமர் மோடிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 26, 2025 02:25

பழனிசாமியை மிரட்ட அவர் சம்பந்தியை மிரட்ட முடியாது. அந்த மெகா ஊழல் வழக்கில் சம்பந்தியோட கூட்டாளி எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடக பாஜக மாநில தலைவர்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 26, 2025 02:22

அமித் ஷா வலியுறுத்தியும் பழனிசாமி கேட்கவில்லை. - ஏபி, சிடி, ஈடி, சிபிஐ வெச்சி மிரட்ட முடியாத சோகம். திருடனுக்கு தேள் கொட்டின பரிதாபம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை