உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்தது ஏன்? காரணத்தை கண்டுபிடித்தார் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்தது ஏன்? காரணத்தை கண்டுபிடித்தார் செல்லூர் ராஜூ

மதுரை: ''முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு மிட்டாய், ஸ்டாம்ப் போதை அதிகரித்துள்ளது,'' என, மதுரையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த மனிதசங்கிலி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் விதவிதமான போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. உலகம் முழுவதும் போதை பொருட்களை சப்ளை செய்யும் மாபியா கும்பல் தலைவராக ஜாபர் சாதிக் இருந்துள்ளார்.அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்த பிறகே டில்லி போலீசார் கைது செய்தனர். முதல்வராக ஸ்டாலின் வந்தபிறகு மிட்டாய், ஸ்டாம்ப் போதை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் போதைபொருட்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன். சர்வாதிகாரியாக ஆவேன் என ஸ்டாலின் சொன்னார். அப்படி அவர் சொன்னபிறகுதான் அதிகரித்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் 2013ல் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். தி.மு.க., ஆட்சி வந்ததும் மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.2021க்கு பிறகு 4 புதிய நிறுவனங்களை துவக்கி இருக்கிறார். திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளார்.இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய தி.மு.க., கூட்டணி கட்சிகள் எந்த நோக்கத்திற்காக கூட்டணியில் உள்ளன எனத் தெரியவில்லை. போராட்டத்திற்காகவே பிறந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்காத வி.சி.க., பேசாமல் இருப்பது வேதனை தருகிறது. எங்கள் ஆட்சியில் குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெற்றதாக தி.மு.க.,வினர் சொல்கிறார்கள். குட்காவை விட மோசமானது போதைப்பொருள். சட்டசபை மாண்புகளை மீறி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அவைக்கு குட்காவுடன் வந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.திருச்செந்துாரில் ஆறுமுகசாமி சூரசம்ஹாரம் செய்து மக்களை காப்பது போல், ஆறுமுகசாமியான எங்கள் பழனிசாமி மக்களை காப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

ம.நீ.ம., கண்டனம்

தி.மு.க., கூட்டணியில் ம.நீ.ம., கட்சிக்கு 2025ம் ஆண்டில் ஒரு ராஜ்யசபா 'சீட்' தருவதென முடிவானது. இதற்கு சம்மதித்து கமலஹாசன் கையெழுத்திட்டார். இதுகுறித்து பேட்டி அளித்த செல்லுார் ராஜூ, 'உலக நாயகனாக சுற்றி வந்தவர் வடிவேலுவைவிட காமெடியனாகி விட்டாரே' என கிண்டலாக கூறினார்.இதற்கு ம.நீ.ம., கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை மண்டல செயலாளர் அழகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தீர்கள். தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்தீர்களா. ஏன் உங்கள் வீட்டு பக்கம் உள்ள செல்லுார் கண்மாயை துார்வாரவாவது செய்தீர்களா. 13 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நீங்கள்தான் காமெடியன். நாங்கள் உங்களை ஒரு பொருட்டாக கருதவில்லை. எங்கள் தலைவருக்கு இணையாக ஒருவர் பேசட்டும். பதில் தருகிறோம்,'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ