சென்னை: 'சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை மாநகர சாலை சிக்னல்கள் முன், குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். சந்தேகம்
பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை. பிச்சை எடுக்க பயன்படுத்தும் கைக்குழந்தைகள், எந்நேரமும் துாங்கிக் கொண்டிருக்கின்றன; இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வெயில், வாகன சத்தத்துக்கு கூட, அந்த குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. அதனால் குழந்தைகளுக்கு துாக்க மாத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறதா; வேறு மருந்து அல்லது ஆல்கஹால் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என, கண்டறிய வேண்டும். பிச்சை எடுக்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழில் பேசுவதில்லை. குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றனரா; பின்னணியில் செயல்படுவோர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக, ஆக., 8ல் அளித்த மனுவை பரிசீலித்து, குழந்தைகளை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணை
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.செந்தில்குமார், எம்.காமேஷ் ஆஜராகி, 'சாலைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்கள், உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய்கள் தானா என்பதை கண்டறிய, மரபணு பரிசோதனை நடத்த வேண்டும்' என்றனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த 21ம் நுாற்றாண்டிலும் இதுபோன்ற நிலை நீடிக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிணைந்து, தீர்வு காண வேண்டும். இதுபோன்ற செயல்களை தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.