| ADDED : டிச 10, 2025 06:49 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பல்கலையில் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் சீல் வைக்கப்பட்டு, போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர் பெயரையோ அல்லது காரணத்தையோ வெளியிட மறுத்துவிட்டனர். கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த காலத்தில்...
சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த நவம்பர் 30ம் தேதி கலிபோர்னியாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.