கடல் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த இலங்கை முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜன., 28ல் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஐந்து பேர் காயம் அடைந்தனர்; 13 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, டில்லியில் உள்ள இலங்கை துாதரை, நம் வெளியுறவு அமைச்சகம் அழைத்து கண்டனம் தெரிவித்தது. கொழும்புவில் உள்ள இந்திய துாதரகமும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் துப்பாக்கிச் சூடு விவகாரத்தை எழுப்பியது. இரு நாடுகளுக்கு இடையே மீனவர் பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில், சர்வதேச கடல் பகுதியில் தங்கள் நாட்டு கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர் என இலங்கை அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய இலங்கை அமைச்சர் நலிந்தா ஜெயதிஸா, ''ரோந்து பணியையும், கைது நடவடிக்கைகளையும் அதிகரிப்போம். இந்தியாவுடன் மீனவர் பிரச்னை குறித்து பேசும் அதே நேரத்தில் எங்களுடைய நடவடிக்கைகளும் தொடரும்,'' என்றார்.