உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெண் பத்திரிக்கையாளர்கள் அவமதிப்பு; டிரம்ப்புக்கு முட்டுக்கொடுத்த வெள்ளை மாளிகை

பெண் பத்திரிக்கையாளர்கள் அவமதிப்பு; டிரம்ப்புக்கு முட்டுக்கொடுத்த வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: இருவேறு சம்பவங்களில் பெண் பத்திரிக்கையாளர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமதித்து பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது, சவுதி அரேபியாவை 'நேட்டோ' அல்லாத முக்கிய கூட்டணி நாடு என்று அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இந்தப் பயணத்தின் போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 2018ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் பத்திரிக்கையாளர் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏபிசி செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கஷோகியின் கொலைக்கு சவுதி இளவரசர் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை கூறிய நிலையில், அமெரிக்கர்கள் ஏன் இளவரசரை நம்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனால், கோபமடைந்த டிரம்ப், 'நீங்கள் போலி செய்தி. சர்ச்சைக்குரிய நபரை பற்றி பேசுகிறீர்கள். அதுபற்றி சவுதி இளவரசருக்கு ஏதும் தெரியாது. இதை அப்படியே விட்டு விடலாம். எங்களின் விருந்தினரை சங்கடப்படுத்த வேண்டாம்,' என்று கூறினார். அதன்பிறகு பேசிய சவுதி அரேபியா இளவரசர் சல்மான், அது ஒரு பெரிய தவறு என்றார். அதேபோல, சில நாட்களுக்கு முன்பு விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், ' பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் பற்றிய கோப்புகளில் மறைக்க ஏதுமில்லை எனில், அதனை ஏன் வெளியிடக் கூடாது,' என்று ப்ளும்பெர்க் செய்தி நிறுவன பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால், கடுப்பான டிரம்ப், 'வாயை மூடு, பன்றி,' என்று கூறி மிரட்டுவதை போல கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெண் பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதை நியாயப்படுத்தும் விதமாக, ஜனநாயகக் கட்சியின் சார்பு ஊடகங்கள் என்று வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பொருத்தமற்ற மற்றும் தொழில்முறைக்கு மாறான அணுகுமுறையை அந்தப் பெண் பத்திரிக்கையாளர் காட்டியுள்ளார், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ