நொய்டா கோவிலின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
மூன்றாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, நொய்டாவின் செக்டார் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகம், ஆகஸ்ட் 24 முதல் 27 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. வேத மந்திரங்கள் முழங்க, கணபதி ஹோமத்துடன் நான்கு நாட்கள் விழா தொடங்கின. தொடர்ந்து நவகிரக ஹோமம், ஸ்ரீ சுப்ரமணிய ஹோமம், ருத்ர ஏகாதசி, திருப்புகழ் அன்பர்கள் வழங்கிய திருப்புகழ் பாடல்கள், ஸ்ரீ சுப்பிரமணியர் லட்சார்ச்சனை, ஸ்ரீமத் பாகவத பாராயணம், பக்தர்கள் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு பஜனை நடந்தது. நிறைவு நாளில், ராமர் - சுதர்சன ஹோமம், திரிபுர சுந்தரி அம்பாள் ஹோமம், அனைத்து சந்நிதிகளுக்கும் அபிஷேகம், மற்றும், மாலையில் ஆஞ்சநேய உற்சவம், அனுமன் சாலிசா பாராயணம், ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்து. அனைத்து நாட்களிலும் மகா தீபாராதனையுடன், பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஆஸ்தான பண்டிதர்கள் : ஸ்ரீராம் மற்றும் ஷங்கரின் வழிகாட்டுதலின் கீழ், கோயில் அர்ச்சகர்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா தவிர பதினொரு வாத்தியார்கள் கொண்ட குழுவின் உதவியுடன் நடந்தன. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி பெண்கள் பிரிவு, நன்கொடையாளர்கள், ஸ்பான்சர்கள், தன்னார்வலர்கள், உறுப்பினர்கள், ரவி சர்மா, பாலாஜி, ராஜு அய்யர், ராமசேஷன், ராஜேந்திரன், தவிர, வெங்கட்ராமன், ஆர். பழனிவேல் மற்றும் பராமரிப்பு ஊழியர்ககளுக்கும், கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். 'நொய்டா முருகன் கோவில்' என்று பிரபலமாக அறியப்படும் இந்த செக்டார் 62 நொய்டா கோயில், 10,000 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டது. ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் மகா கும்பாபிஷேகம், 21, ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்றது. ஒத்த எண்ணம் கொண்ட பக்தர்களால் தொடங்கப்பட்ட வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்