மலையேற்றம் செய்வது என்றால், சாகச பிரியர்களுக்கு கொள்ளைப்பிரியம். விடுமுறை நாட்களில் மலைப் பிரதேசங்களை தேடிச் செல்வர். பெல்தங்கடியின், கடாயிகல்லு மலை சுற்றுலா பயணியரை வரவேற்க காத்திருக்கிறது. தட்சிண கன்னட மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், மஞ்சொட்டி கிராமத்தில், கடாயிகல்லு மலை உள்ளது. இது சாகச பிரியர்களின் சொர்க்கம். கடல் மட்டத்தில் இருந்து, 1,788 அடி உயரத்தில் உள்ளது. இதன் உச்சியை அடைய விரும்பினால், 2,800க்கும் அதிகமான செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். இந்திய தொல்லியல் துறை, கடாயுகல்லு மலையை பாதுகாக்கப்பட்ட தலமாக அறிவித்துள்ளது. குதுரேமுக் தேசிய பூங்கா எல்லையில் இது அமைந்துள்ளது. மலையேறி செல்லும் வழியில், பீரங்கிகள், கற்பாறைகளுக்கு நடுவே பாயும் நீர், ஆயுத கிடங்கு, ஏரி என பலவற்றை காணலாம். கண்களையும், மனதையும் குளிர்விக்கும் இயற்கை அழகை ரசித்தபடி, மலையேறுவது அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவத்துக்காகவே இளைஞர்கள், இளம் பெண்கள் மலையேற்றத்துக்கு வருகின்றனர். கடாயிகல்லு சுற்றுப்பகுதியில், ஏராளமான வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளன. கோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் பாறைகள் வழுக்கும் அபாயம் உள்ளதால், கடாயிகல்லுவுக்கு செல்ல சாகசப்பிரியர்கள், சுற்றுலா பயணியருக்கு தட்சிணகன்னட மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது மழை குறைந்து, பாறைகள் உலர்ந்துள்ளதால், தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர். எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து, 316 கி.மீ., மங்களூரில் இருந்து, 57 கி.மீ., மைசூரில் இருந்து 238 கி.மீ., தொலைவில், பெல்தங்கடி உள்ளது. பெல்தங்கடியில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் லாயிலா என்ற இடம் உள்ளது. இங்கிருந்து கில்லுார் பாதையில் 5 கி.மீ., சென்றால், மஞ்சொட்டி வரும். இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் கடாயிகல்லுவை அடையலாம். மஞ்சொட்டி வரை அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உள்ளது. கடாயிகல்லுவில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பெரியவர்களுக்கு 50 ரூபாய், சிறார்களுக்கு 25 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இரவில் இங்கு தங்க அனுமதி இல்லை. அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: ஜமலாபாத் கோட்டை, ராணி ஜரி வியூ பாயின்ட், சிஷிலேஸ்வரா கோவில், தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில். - நமது நிருபர் -