அது... நீங்களா?
தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர். முதன்முறையாக அந்திவாடி செக்போஸ்ட் பகுதியின், 'சரண் கிராமத்து வீட்டு சமையல்' உணவகத்திற்கு சென்றிருந்தேன். 'செல்ப் சர்வீஸ்' வரிசையில் எனக்கு முன்னால் கூலிங்கிளாஸ் அணிந்த பதின்வயது மகளுடன் தந்தை; மகளின் ஆங்கில வழி கேள்விகளுக்கு அழகு தமிழில் பதில் தந்து கொண்டிருந்தார். இருவரும் கேழ்வரகு களி, ஜிலேபி மீன் குழம்பு வாங்கி அமர்ந்தனர். அம்மீனைப் பார்த்ததும் எனக்கு எச்சிலுாற, அதே மெனு சொல்லி நானும் அமர்ந்தேன். காவிரியில் செழிப்பாய் வளர்ந்த ஜிலேபி மீன், 'ஸ்பெஷல்' வீட்டு மசாலாவில் கமகமத்தது. ஆழ்ந்து மூச்சிழுத்தவாறே களியையும், மீனையும் ஸ்மார்ட்போனில் சிறை பிடித்துக் கொண்டிருந்த மகளிடம், 'முதல்ல சாப்பிடும்மா' என்றார் அந்த அப்பா.கொழு கொழு சதையுடன் மெத்தென்று இருந்த ஜிலேபி மீன், பிரத்யேக வீட்டு மசாலாவுடன், ஆந்திர பாணி சமையல் காரத்தில் 'சுரீர்ர்ர்...' என்று ருசித்தது. வெண்ணெய் கலந்த வழுவழு களியை இதமான புளிப்பு கலந்த மீன் குழம்புடன் உள்ளே தள்ளுகையில்... அய்யோடா... இரைப்பைக்கு பரம சுகம்! கண்கள் மூடி ருசியில் நான் லயித்துக் கொண்டிருந்த நேரத்தில், 'ஓ மை காட்... இட்ஸ் அமேசிங்' - என் மனதை தன் குரலில் சொன்னாள் அம்மகள். மகளின் மகிழ்ச்சி பார்த்த தந்தை முகத்தில் தன் பிறப்பின் அர்த்தம் உணர்ந்த திருப்தி!மகளுக்கு உணவூட்டியும், பார்த்த எனக்கு உணர்வூட்டியும் விட்ட அந்த தந்தை நீங்களா?சரண் கிராமத்து வீட்டு சமையல்63809 73229