நிலமும் நானும்
'பளிச்'னு சொல்லுங்க ராஜன்... 'என் குழந்தை யை முதன்முதலா கையிலேந்துன சந்தோஷத்தை எனக்குத் தந்தது இந்த நிலம்!' திருவாரூர், அய்யம்பேட்டை நத்தம் பகுதியில், ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் ராஜன். துவக்கத்தில் தஞ்சாவூரில் 'குங்பூ' ஆசிரியர்; பிறகு, 'ரியல் எஸ்டேட்' தொழில். தந்தையின் மறைவுக்குப் பின் பாகப்பிரிவினையில் இந்நிலம் கைக்கு வர, தற்போது விவசாயி! என்ன கற்பித்திருக்கிறது நிலம்? 'நீ எதைச் செஞ்சாலும் ஊர் கேலி பேசத்தான் செய்யும்; பின் வாங்கிடாம தொடர்ந்து வேலை பண்ணிட்டே இரு. கேலி பண்ணின ஊர் உன்னை மெச்சும்!' இந்த பாடத்துக்கான காட்சி நிலத்தில் முதலில் உளுந்து விதைத்திருக்கிறார் ராஜன். 'லாபம் இல்லை' என்றாலும் நஷ்டம் இல்லை. அடுத்து, ஆத்துார் கிச்சிலி சம்பா! 'ஆலங்குடி விவசாயி பெருமாள் வழிகாட்டுதல்ல, நாற்றுகளுக்கு நடுவுல 40 செ.மீ., இடைவெளி விட்டேன்! 'என்னப்பா... வயல்ல பாய் விரிச்சு துாங்கப் போறியா'ன்னு ஊர்ல கேலி பண்ணினாங்க! 'அந்த இடைவெளியால, நாற்று வேர் பிடிக்கிறதுக்கான நாட்கள் குறைஞ்சது; நல்லா துார் கட்டி ரெண்டு மடங்கு கிளை பரப்பி நாற்று எழும்ப, 28 மூட்டை நெல் கிடைச்சது!' மஹாராஷ்டிரா இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகரின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற ராஜன், தன் பயிர்களுக்கு சாணம், கோமியம், வெல்லம், துவரம் பருப்பு மாவு கலந்த 'ஜீவாமிர்தம்' தெளித்துள்ளார்! இதற்குப்பின், பஞ்சகவ்யா; தற் போது, திட வடிவ 'கன ஜீவாமிர்தம்' பயன்படுத்துகிறார்! 'இதனால, என் வயல்ல மண் புழு, நண்டு எல்லாம் பார்க்கலாம். 'என்னை நீ ரொம்ப நல்லா பார்த்துக்கிறே'ன்னு நிலம் எனக்கு நீட்டுற பாராட்டு சான்றிதழ் இது' எனச்சொல்லும் ராஜன், ஊர் அதிர்ச்சியாகும் அளவில் அடுத்து ஒரு முடிவெடுக்கிறார். இரண்டாவது பாடம் 'எங்க பகுதி மண்ணு பூவுக்கானது கிடையாது. ஆனா, நெல்லுக்கு அப்புறம் பூ போடணும்னு தைரியமா முடிவெடுத்தேன். நான் நம்பின மண் என்னை கைவிடலை! 'முதல்ல சாமந்தி, அடுத்து மல்லி, இப்போ ரோஜா போட்டு இருக்கேன். பூச்சிகள்ல இருந்து பூக்களை காக்க, 'பேசில்லஸ்' பாக்டீரியா பயன்படுத்துறேன்!' பெற்ற பிள்ளை போல் நிலத்தை பார்த்துக் கொள்ளும் ராஜனுக்கு பெரும் பக்குவத்தை தந்துள்ளது இந்நிலம். ஆம்... எட்டு ஆண்டு விவசாயத்தில் ஒரே ஒருமுறை மட்டும் சோளம் விதைத்த இவர், அதனை அறுவடை செய்யவே இல்லை. காரணம்... இவரது வயல் தேடி வந்து பசியாறிய குருவிகள்! ஒவ்வொருநாளும் வயலில் இறங்குகையில், 'உன் பொறுமை எனக்கும் வளரணும்' என்று வேண்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ராஜன், மனைவி ரேகா, மகள் திவ்யதர்ஷினி, மகன் ருத்ரநாதனோடு நிலம் தொட்டு வணங்கத் தவறுவதே இல்லை.