உள்ளூர் செய்திகள்

காலமும் காட்சியும்

காலம்: டிசம்பர் 26, 2004 காலை 9:20 மணி களம்: வேளாங்கண்ணி கடற்கரை வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயத்தில் பிரார்த்தனை முடித்து, தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கடற்கரை நோக்கி நடந்து கொண்டிருந்த குமரேசனை, கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சுருட்டி இழுத்துப் போகிறது சுனாமி. ஒரு கி.மீ., தொலைவு நீச்சல் அடித்து கரை திரும்பியவரின் பார்வையில் சடலமாய் மனைவி. காலம்: டிசம்பர் 26, 2004 இரவு 10:00 மணி களம்: நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை குமரேசன்: 'என் பையன் பேரு அபிஷ், 11 வயசு; பொண்ணுக்கு, 8 வயசு... பேரு ஜோபெல்; எங்க தேடியும் அவங்க கிடைக்கலை; உங்களுக்கு ஏதாவது தெரியுமா சிஸ்டர்? செவிலி: தெரியலையே சார். மார்ச்சுவரி பக்கத்துல இருக்குற அறையில குழந்தைகளோட சடலங்களை அடுக்கி வைச்சிருக்காங்க. ஒரு மெழுகுவர்த்தி தர்றேன்... மனசை திடப்படுத்திட்டு போய் தேடிப் பாருங்க! அந்த அறைக்குள் குமரேசன் தேடியவை இல்லை. 'ஒருவேளை பிழைத்திருப்பார்களோ...' மனதின் ஓரத்தில் ஓர் நம்பிக்கை பிறக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகள் * 'சுனாமியில் தப்பி பிழைத்த குழந்தைகள்'னு எங்கேயிருந்து தகவல் வந்தாலும், அங்கே போய் பார்ப்பேன்! * நாகப்பட்டினம் கடற்கரை கிராமங்கள் முழுக்க என் பிள்ளைகளோட புகைப் படங்களை ஒட்டினேன்! காலம்: 2007 களம்: மனநல சிகிச்சை மையம் மனநல நிபுணர்: உங்க பிள்ளைகள் ஒரு பயணத்துக்கு கிளம்புறதா கற்பனை பண்ணிக்கோங்க குமரேசன்... இப்போ நீங்க அழுதுகிட்டே வழியனுப்பினா அவங்க பயணம் சுகமா இருக்குமா; இதுவே, அவங்களை நீங்க அன்போட வழியனுப்பினா அது நிறைவா இருக்கும்; இந்த ரெண்டுல நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க? இந்த ஒரு கேள்வி, 'எங்கு இருந் தாலும் என் குழந்தை கள் கடவுளின் பாதுகாப்பில் இருக்கட்டும்' எனும் மனநிலைக்கு குமரேசனை நகர்த்த, அவரது மனம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டது இந்திய ராணுவத்தின் சுபேதார் பணி. அவரது இழப்பு, தனிமை துயரத்திற்கு நீர் வார்த்துவிடக் கூடாதென மறுமணம் செய்து வைத்தது சுற்றம். இன்று 'காணவில்லை' தலைப்பில், டிசம்பர் 26 தோறும் அபிஷ், ஜோபெல் புகைப்படங்களை நாளிதழ்களில் விளம்பரம் செய்யும் குமரேசன், அதைப் பார்த்த பின், 'எனக்கும் உங்கள் மகள், மகன் வயசுதான்; உங்களை நான் 'அப்பா'ன்னு கூப்பிடலாமா' என வரும் அழைப்புகளிலும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் அனுப்பி வைக்கப்படும் அபிஷ், ஜோபெல் புகைப்படங்களிலும் நெகிழ்கிறார். இப்படியான அன்பிற்கு 'நன்றி' சொல்லும் இந்த 62 வயது தந்தை, தற்போது திருநெல்வேலி வடக்கன்குளத்தில் வசிக்கிறார்; யாரிடமும் அனுதாபம் விரும்பாத இவர் அனைவரிடமும் வைக்கும் ஒரே கோரிக்கை... 'வாய்ப்பிருந்தா உங்க பிரார்த்தனைகள்ல என் பிரார்த்தனையையும் சேர்த்துக்கோங்க... ப்ளீஸ்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !