முதல்வரே... ஒரு நிமிஷம்!
செய்தி: அதிவேகத்தில் வந்த கார் மோதி துாக்கி வீசப்பட்ட துாய்மை பணியாளர் உயிரிழப்பு! அநீதி: நிவாரண வாக்குறுதிகள் அளித்துவிட்டு அமைதி காக்கும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம்! முதல்வரே... செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் ஏரிக்கரையைச் சேர்ந்த ஏழுமலையாகிய நான் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 5ல் ஒப்பந்த துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த ஜூலை 27ம் தேதி நள்ளிரவு 12:45 மணியளவில், சேலையூர் சிக்னல் அருகே தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையோர குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த துாய்மை பணியாளரான என் மனைவி ராணி மீது, அசுரவேகத்தில் வந்த கார் மோதியதில் அவள் இறந்து விட்டாள். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கார் ஓட்டுநர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிய, என் மனைவியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் அளித்ததோடு ஒதுங்கிக் கொண்டது தனியார் ஒப்பந்த நிறுவனம். அவ்வளவுதானா... 'துாய்மை பணியாளர்' குடும்பம் மீது உங்கள் அரசு காட்டும் அக்கறை அவ்வளவுதானா? நவம்பர் 9, 2023; திருவான்மியூரில் இதே போல் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு மறுநாளே வீடு தேடிச்சென்று நிவாரணம் அளித்த உங்கள் அரசு, ஆகஸ்ட் 23, 2025; மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பலியான கண்ணகி நகர் துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு மறுநாளே வீடு தேடிச் சென்று நிவாரணம் வழங்கிய உங்கள் அரசு எங்கள் குடும்பத்தை பரிதவிக்க விடுவது ஏன்?