உள்ளூர் செய்திகள்

முதல்வரே... ஒரு நிமிஷம்!

செய்தி: 'இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்' ஒரு தந்தைக்கு தந்த கண்ணீர் பரிசு! அநீதி: 'திட்ட முதிர்வு தொகை' தராமல் நான்கு ஆண்டுகளாக அலைக்கழிக்கும் சமூகநலத்துறை! முதல்வரே... சிவகாசி, நாரணாபுரத்தை சேர்ந்த நான் முனியராஜ்; இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் என் மூத்த மகள் மஞ்சுளாவிற்கு வரவேண்டிய முதிர்வுத் தொகை, நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் கிடைத்தபாடில்லை! திட்ட விதிமுறைகளின்படி முதலீடு செய்த 25 ஆயிரம் ரூபாய்க்கு, 'தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்' வழங்கிய ரசீது என் வசம் உள்ளது. 'கொரோனா' முடக்கத்திற்குப் பின், முதிர்வுத் தொகைக்காக ஆகஸ்ட் 9, 2021ல் அனைத்து ஆவணங்களோடு சிவகாசி சமூகநல அலுவலரிடம் விண்ணப்பித்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பின், 2024 பார்லிமென்ட் தேர்தல் முடிந்த 5வது நாளில் அழைத்த சிவகாசி சமூகநல அலுவலர், 'ஜாதி சான்றிதழ் இணைத்து மீண்டும் விண்ணப்பியுங்கள்' என்றார். அதன்படி, ஏப்ரல் 26, 2024ல் விண்ணப்பித்தேன். வழக்கம் போல் அரசு தரப்பில் அமைதி! கடந்த ஜுலை 31ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவிற்கு, 'பரிசீலனையில் உள்ளது' எனச் சொல்லி வந்த ந.க.எண் : 07/அ3/2024 - 4.8.2025 தேதியிட்ட மாவட்ட சமூகநல அலுவலக பதில் கடிதம் கிடைத்ததே தவிர இன்னும் பலனில்லை. என் மகள் படிப்புக்குத் தான் என் பணம் உதவவில்லை... அவள் திருமணத்திற்காவது உதவுமா; மனமிரங்குமா உங்கள் அரசு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !