சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!
சில அங்கீகாரங்கள் ஆண்டவனை சந்தித்தது போன்ற உணர்வைத் தருபவை; மொட்டையன் ஓவியர் மற்றும் கந்தசாமி கொத்தனாரின் மூலம் 30 - 40 ஆண்டுகளுக்கு முன் இந்த உணர்வைப் பெற்றிருக்கிறார், பொய்க்கால் குதிரை தயாரிப்பு கலைஞரும் ஓவியருமான 74 வயது சடாச்சரம்; இருப்பிடம்... மதுரை வன்னிவேலம்பட்டி! இதற்கெல்லாம் காரணமான அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா?எப்படி மறக்க முடியும்; கிளாங்குளம் கோவிலுக்கு சப்பரம் கட்டுறவர் இறந்து போக, 1970ல் அந்த ஊர்க்காரங்க அப்பாவைத் தேடி வந்தாங்க! அப்பா என்னை அனுப்பி வைச்சார். அவங்க ஊர்ல என்னைப்பார்த்ததும், 'சின்னப் பயலா இருக்கானே'ன்னு கேலி பண்ணுனாங்க! 10 நாள் அங்கேயே தங்கி சப்பரத்தை முடிச்சுக்கொடுத்தேன்; 10 ரூபாய் கூலிகிடைச்சது. என் கலை வாழ்க்கை 14 வயசுல இப்படித்தான் ஆரம்பிச்சது!அப்படியே வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கவும் விளம்பரங்கள் எழுதவும் கத்துக்கிட்டதோட பலன்... மொட்டையன் ஓவியர் கூட வேலை பார்க்குற வாய்ப்பு அமைஞ்சது! நான் 'குருநாதர்' ஆன கதை அந்தகாலத்துல, 'போர்டு' எழுதுறதுல 'மொட்டையன்'தான் ராஜா; 1970 - 79 காலகட்டத்துல அவர்கிட்டே வேலை பார்த்து, 5 ரூபாய் கூலி வாங்குறப்போ அவ்வளவு கவுரவமா இருக்கும்! என்னைவிட 20 வயசு மூத்தவரா இருந்தாலும், 'நெளிவும் சுழிவுமா எழுதுற நீதான்யா என் குருநாதர்'னு சொல்லுவார். அவர் துபாய் போனதும் நான் தனியா வேலை செய்ய ஆரம்பிச்சேன்; மூங்கிலை வளைச்சு பொய்க்கால் குதிரைகள், பொம்மைகள் தயார் பண்ணினேன்; காகிதக்கூழ்ல பொம்மைகள் உருவாக்குனேன்; நிறைய கலைஞர்களை சந்திச்சிட்டேன்; ஆனாலும், சக கலைஞனை மனசார பாராட்டுற 'மொட்டையன்' மாதிரியான மனுஷனை நான் சந்திக்கவே இல்லை!இவருக்கு நான் 'ஆச்சரியம்'எங்க ஊர் கோவில் கோபுரம் கட்ட வந்தார் கந்தசாமி கொத்தனார்; அந்த 1990கள்ல அவர் மதுரையில ரொம்ப பிரபலம்; அப்போ எங்க வீட்டு வாசல்தான் பேருந்து நிறுத்தம்!பேருந்துக்கு காத்திருந்த கொத்தனார், வீட்டு திண்ணையில நான் காய வைச்சிருந்த பொய்க்கால் குதிரையை தடவிப் பார்த்துக்கிட்டே, 'வல்லவனுக்கு வல்லவன் வையத்துல இருப்பான்'னு சொன்னார். கையை கட்டிக்கிட்டு வந்து நின்னேன்! 'கோபுரங்களை வடிவமைக்கிறதுதான் சவால்'னு நினைச் சிட்டு இருந்தேன். ஆனா, 'ஆடுறவங்களுக்கு வசதியா சமமான எடையில மூங்கில்களை தேர்ந்தெடுத்து இதை வடிவமைக்கிறது சாதாரண காரியம் இல்லை' ன்னு பாராட்டினார்! அந்த நிமிஷத்துல இருந்து தன் கோபுர வேலை முடியுற நாள் வரைக்கும் தினமும் அவர் என்னை சந்திக்காம இருந்ததில்லை; கலைஞனுக்கு பெரும் கலைஞன் தந்த மரியாதை அது.