உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்

மணற்கல் சிற்பமாய்... ஆனையுரித்த பிரான்! காஞ்சிபுரத்தின் கலைப்பொக்கிஷமான ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் ஆலய கருவறையின் வெளிப்புற சுவரில் புடைப்புச் சிற்பமாய் காட்சி தருகிறார்... கரி உரித்த சிவன், கஜாசுர சம்ஹாரர், கஜயுத்த மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி என அழைக்கப்படும் ஆனையுரித்த பிரான். 'மார்க்கண்டேய முனிவர் பூஜித்து வழிபட்ட ஸ்தலம்' எனும் தல வரலாறு கொண்ட இந்த ஆலயம் காஞ்சிபுரம், ஜவஹர்லால் தெருவில் உள்ளது. யானை முக அசுரனின் தோல் உரித்து வதம் செய்த அகோர மூர்த்தியாய் சிவபெருமானை காட்சிப்படுத்தும் இச்சிற்பம், சிவபுராணம் சொல்லும் 64 சிவ வடிவங்களில் ஒன்று. 'இரண்டாம் நரசிம்ம பல்லவன் எனும் ராஜசிம்மன், நாகரபாணியில் கட்டமைத்த இக்கோவிலின் காலம் கி.பி., ஏழாம் நுாற்றாண்டு' என்கின்றன வரலாற்று நுால்கள்! கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் நாம் சேகரித்த இந்த அடிப்படை தகவல்களை விஞ்சி நிற்கிறது, காஞ்சிபுரம், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சு.உமாசங்கர் பகிரும் செய்தி...'கடின உழைப்பு கோரும் மணற்கல் புடைப்புச் சிற்பங்களின் கலைநயம் பிரமிக்கத்தக்கது. இறை உருவங்களுக்கான தாளக் கணக்கு அடிப்படையில் செதுக்கப்பட்ட இச்சிற்பம் அஷ்டதாளம் அல்லது நவ தாளமாக இருக்கக்கூடும்!'யானையின் தோல் அடர்த்தியை இறுகிய மண் எனும் மணற்கல் சிற்பத்தில் துல்லியமாய் காட்சிப்படுத்தி இருப்பது பல்லவர் கால கலைநயத்தின் உச்சம்!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !