கதை பேசும் சிலை
காண்பவரை மயக்கும் வண்டார் குழலி! 'இருக்குற மகராசி அள்ளி முடிஞ்சிக்கிறா' - 'அலங்கரித்துக்கொள்ள அழகான கருங் கூந்தல் வேண்டும்' என விரும்பும் பெண் களின் ஆசையையும், ஏக்கத்தையும் ஒருசேர கூறும் சொல் வழக்கு இது! இப்படி ஒரு ஏக்கம் விதைக்கும் அழகியாக கல்லில் ஓர் அரசி! கடலுார் ஸ்ரீ முஷ்ணம் பூவராக பெருமாள் கோவில் பதினாறுகால் மண்டபத்து வட கிழக்கின் முதல் துாணில், கணவர் அச்சுதப்ப நாயக்கரின் இடப்புறமாய் நின்று சுவாமியை சேவித்துக் கொண்டிருக்கிறாள் இவள்! கைகொள்ளா கார்கூந்தலை மூன்றாய் பிரித்து, அவற்றை கழுத்துக்கு கீழிருந்து அடிவரை பின்னி, குஞ்சம் மாட்டி, பட மெடுத்தாடும் அரவமாய் அலங்கரித்திருக்கிறாள். இப்படியான சடை பின்னலை, 'பனிச்சை' என்கிறது சங்க இலக்கியம்; இதை கல்லில் நெய்திருக்கிறது சிற்பியின் கைவண்ணம்! 'இராக்குடி' வகையறா தலை அணிகலன் களுடன் கூடிய கன்னச்சரமும், அழகிய பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பொன், வெள்ளி தகடுகளால் ஆன கொண்டை திருகும், குஞ்சமும் அலங்காரத்திற்கு அழகு கூட்டியிருக்கின்றன. மெல்லிடையில் ஒட்டியிருக்கிறது ஒட்டியாணம் போன்ற கடிசூத்திரம்! 'மன்னன், அரசிகள் கம்பீரத்தோடு அணிகலன் பெயர்களையும் அறியும் வண்ணம், காலத்தால் அரிக்க முடியாதபடி துல்லியமாய் செதுக்கியிருக்கும் நாயக்கர் கால சிற்பிகள் போற்றுதலுக்கு உரியவர்கள்' என்கிறார் கோவிலின் தீவிர பக்தரான லட்சுமி வராகன்.