திருக்குறள்: குறள் சொல்லும் குரல்
யார் குரல் - பூங்கோதை - வயது 67குரலின் முகவரிராமநாதபுரம், தங்கச்சிமடம் தான் எனக்கும் என் வீட்டுக்காரர் ராயப்பனுக்கும் பூர்வீகம். மீன்பிடி தொழில்தான் வருமான ஆதாரம். 19 வயசுல கல்யாணம் நடந்தது. அப்போ, அவருக்கு சொந்தமா ஒரு மோட்டார் படகு இருந்தது. இரண்டு பசங்களையும், மூணு பொம்பளை புள்ளைகளையும் கடலம்மா தந்த வருமானத்துல வளர்த்தோம். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருந்தது. குரலின் நம்பிக்கைபொண்ணுங்களை கரையேத்த கடன் வாங்க வேண்டிய சூழல். படகை வித்துட்டு அவரும் பசங்களும் மத்தவங்க படகுல கடலுக்கு போக ஆரம்பிச்சாங்க. அப்போகூட, 'என்னைக்காவது ஒருநாள் நம்ம வாழ்க்கையும் உசரம் தொடும்'ங்கிற நம்பிக்கையில நிம்மதியாதான் இருந்தேன்!குரலின் வலிஅவரோட பீடி புகைக்கிற பழக்கத்தால, 2013ல அவருக்கு நாக்குல புற்று. கொஞ்சநாள்ல எனக்கும் வயிறு வலி. செலவை நினைச்சு அவர்கிட்டே பிரச்னையை மறைச்சிட்டேன். கல்யாணமானதும் பிள்ளைங்க அது அதுக வாழ்க்கையைத் தேடிப் போயிருச்சுக. வலி தாங்க முடியாத ஒருநாள் அவர்கிட்டே விஷயத்தை சொன்னேன். பயந்தமாதிரியே... கர்ப்பப்பை புற்று.குரலின் விதிபுற்றுநோய் முற்றிப் போகாம கதிர்வீச்சு சிகிச்சை என்னை காப்பாத்திட்டு வருது. ஆனா, நான், புள்ளைங்க, டாக்டர் எல்லாரும் சொல்லியும் பீடி புகைக்கிற பழக்கத்தை அவர் நிறுத்தாததால, போன செப்டம்பர் 8ம் தேதி அவர் இறந்துட்டார். அவரோட கடைசி நிமிஷத்துல, 'நான் உனக்கு எதுவுமே பண்ணலையே'ன்னு கலங்கினார். அந்தநேரத்துல விதியை நினைச்சு என்னால அழத்தான் முடிஞ்சது!குரலின் சந்தோஷம்'நல்ல வாழ்க்கை அமையும்'ங்கிற கனவோடவே என் பாதி வாழ்க்கை போயிருச்சு. இப்போ இருக்கிற ஒரே சந்தோஷம் என் பேரன், பேத்திகள்தான்; என் கையால இறா தொக்கு பண்ணிக் கொடுத்தா பேரப் புள்ளைங்களுக்கு அவ்வளவு இஷ்டம்! என் வலிகளை மறந்து நான் சந்தோஷமா இருக்குறது அவங்களோட இருக்குறப்போ மட்டும்தான்! குரலின் அறிவுரைமனுஷ உடம்புல வியாதி இல்லாத நேரம்தான் வாழ்றதுக்கான நேரம். அந்தநேரத்துல சண்டை, சச்சரவுன்னு சந்தோஷத்தை கொன்னுடாதீங்க. நோய் வந்துட்டா, உயிரோட இருக்கும்போதே நரகம் தெரிஞ்சிடும். வேணாம் மக்களே... ஆரோக்கியமா இருக்குற காலத்துல உறவுகளோட சந்தோஷமா இருங்க. உறவுகளோட பகிர்ந்துக்க வேண்டிய உணர்வுகளை, 'நாளைக்கு பார்த்துக்கலாம்'னு மட்டும் தள்ளிப் போட்றாதீங்க. குறள் சொல்லும் குரல்குறள்: 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்வாளது உணர்வார்ப் பெறின்விளக்கம்: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், 'நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள்' என்பதை அறிவார்கள்.