உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: டியூடு

பிரதீப் ரங்கநாதனின் இந்த நான்காவது படம்தான்... கோமாளி !மமிதாவை அறிமுகப்படுத்தும் காட்சியில், அவசியமே இல்லாமல் கேமரா லெப்ட் போய் ரைட் வரும் போதே படைப்பின் தரம் தெரிந்து விடுகிறது! ஆழமாய் சினிமா அறிந்தவர்களுக்கு, 'டைட்டில் கார்டு' பின்னணி காட்சிகளிலேயே டியூடின் அவலட்சணம் தெரிந்துவிடும்! புனிதமான உணர்வை கையாள்வதாய் நினைத்து, 'சாக்கடை'க்கு 'காதல்' என்று பெயர் சூட்டும் விழா நடத்தி இருக்கிறார் இயக்குனர். எங்கேயோ ஆரம்பித்து, ஆணவக்கொலைக்கு எதிராய் பொங்குவதாக பொங்கல் வைத்திருக்கிறது படம்! 'பிரதீப் ரங்கநாதன்கிட்டே அவ்வளவுதான் போல' என எண்ணத் துாண்டும் அதே புளித்த நடிப்பு. 'இந்தாளு பைத்தியமா...' இல்ல... 'பைத்தியம் மாதிரி நடிக்கிறானா...' என பார்ப்போரை குழம்ப வைக்கும் பாத்திரத்தில் சரத்குமார்; நாட்டாமை... முழிச்சுக்கோ! சரத்குமார் பாத்திரத்தின் மகளாக மமிதா பைஜு; பூத்ததற்கு பின்னும் பூத்துக்கொண்டே இருக்கும் அதிசய பூ! பிரதீப்பிடம் மமிதா தன் காதலைச் சொல்கையில்... விழி வழியே உயிர் தீண்டுகிறது காட்சியின் வசீகரம்; தனி ஒருவன் படத்திற்குப் பின் தமிழ் சினிமா பதிவு செய்த அழகிய வானவில் துண்டு இக்காட்சி! 'பூத்தது உணரும் முன் செடியில் இருந்து பூமிக்கு வந்துவிடும் மலரின் அழுகை இப்படித்தான் இருக்குமோ' என எண்ண வைக்கிறது காதல் தோல்வியில் உடையும் மமிதாவின் அழுகை! 'மமிதா எனும் இந்த ஒரே பூந்தியை வைத்து லட்டு பிடித்துவிட வேண்டும்' எனும் இயக்குனரின் பேராசை பெருநஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது நமக்கு! மனைவியை அவள் காதலனோடு கணவன் அனுப்ப முயன்றால் அது... அந்த ஏழு நாட்கள் ; அனுப்பி விட்டால்... டியூடு . ஆக., ‛கறவை மாடு' கேட்டவருக்கு, ‛கணவரை கண்டுபிடித்து தருகிறேன்' எனச் சொன்ன காமெடியை மிஞ்சுகிறது படம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !