உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: எக்கோ (மலையாளம்)

நம் மனதை கரையாக்கி விளையாடும் அலையாக ஒரு த்ரில்லர்!இயக்குனர் தின்ஜித் அய்யதன் ஒரு 'ப்ளாஷ்பேக்' காட்சியை வைத்து, 'நாய் பயிற்றுனரான குரியாச்சனின் குணம் எப்படி; வனத்திற்குள் தலைமறைவாக உள்ளதாக நம்பப்படும் அவரை பலர் தேடுவது ஏன்' என்று விளக்கி இருப்பின் நமக்குள் கேள்வி அலைகள் எழும்பி இருக்காது! திரைக்கதையின் அனைத்து பக்கங்களிலும் இதன் விடைகளை துாவி இருப்பதால், பக்கங்களை முன்னும் பின்னும் புரட்ட வேண்டியிருக்கிறது. 'குரியாச்சனை பிடிக்க அழைத்துச் செல்லப்படு பவனால் அவனை அழைத்துச் செல்லும் இருவருக்கு ஆபத்து' என்பதை யூகிக்க வைக்கும் திரைக்கதை, தன் சுயரூபத்தை காட்டும் இடத்தில் ஈட்டியின் வேகம்! பாத்திரங்களின் குணாதிசயங்கள் அனைத்தும் நாய்களின் குணத்தோடு தொடர்புபடுத்தி பின்னப்பட்டுள்ளன. 'யாருக்கு யார் எஜமானர்கள்' என்கிற 'ஈகோ' மனம், விசுவாசத்தின் எல்லையை உரசும் சூழ்நிலைகள், பாதுகாப்பே சிறைவாசமாக மாறிவிட்ட பிறகான மனதின் எதிரொலி என, படத்தின் தலைப்புக்கு காட்சிகளின் வழியே பல அர்த்தங்கள்! மலையுச்சியில் தனித்திருக்கும் வீட்டில் நாய்கள் சூழ வசிக்கும் வயதான பெண்மணி; பணிவிடை செய்யும் ஒரு இளைஞன்; அப்பெண்ணின் கணவனைத் தேடும் சிலர்; இவர்களைச் சுற்றி எழும்பும் 'ஏன், எதற்கு, எப்படி'களுக்கான சம்பவங் களின் தரத்தை பாகுல் ரமேஷின் ஒளிப்பதிவும், முஜிப் மஜித்தின் இசையும் பன்மடங்கு உயர்த்தி இருக்கின்றன! 'திடுக்' திருப்பங்கள் இல்லை; ஆனால், குரியாச்சன் பற்றி சொல்லப்படும் தகவல்கள் இறுதிப் புள்ளிக்கு நம்மை அழைத்துச் செல்வது நல்ல பரபரப்பு; இதனால், துவக்கம் முதல் இறுதிவரை நின்று எரிகிறது இந்த தீபம். ஆக...சில 'த்ரில்லர்கள்' மட்டுமே திரையில் முற்றுப்பெறினும் மனதிற்குள் தொடரும்; இது, அவற்றில் ஒன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !