நாங்க என்ன சொல்றோம்னா...: டெஸ்ட்
'டெஸ்ட்' என்றால்... சோதனை!தன் திறமை மீதான விமர்சனத்தை மாற்ற நினைக்கும் இந்திய பேட்ஸ்மேன் அர்ஜுனுக்கு ஒரு சோதனை; தனது அறிவியல் கண்டுபிடிப்பை செயல்படுத்தப் போராடும் சரவணனுக்கு ஒரு சோதனை; செயற்கை கருத்தரித்தலில் குழந்தை பெற தவிக்கும் சரவணனின் மனைவி குமுதாவுக்கு ஒரு சோதனை; இம்மூவருக்கும் வாழ்க்கை தரும் சோதனைகளின் முடிவு என்ன?'நான் நடிக்க மாட்டேன்; ஆனா, நான் நடிக்கிறேன்னு நீங்க நம்பணும்!' - இது, அர்ஜுனாக வரும் சித்தார்த் நமக்கு தரும் சோதனை. 'குண்டு சட்டியில இறக்கி விட்டுட்டாங்க... நான் என்ன பண்றது' - மாதவனின் நடிப்பில் தெரியும் இச்சலிப்பை, அன்றாடங்கள் மீதான சரவணனின் சலிப்பாக கருதிக் கொள்ள வேண்டியது அடுத்த சோதனை! இச்சோதனை தரும் காயங்களுக்கான சிறு மருந்து... குமுதாவின் மனதை பளிங்காக பிரதிபலிக்கும் நயன்தாரா!மயங்கி தரையில் சரிந்த மனைவியை அப்படியே விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாடச் செல்கிறான் அர்ஜுன். சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான எந்த அடையாளமும் இல்லாத அப்பாத்திரம், இயக்குனர் சசிகாந்துக்கு மட்டுமே புரிந்த புதிர்! நடுநிலை வகுப்பை தாண்டாத சிறுவன் நிபுணர் அளவுக்கு கருத்து பேசுகையில், 'இது ஏ.ஐ., எழுதிய வசனமோ' எனும் உணர்வு எழுகிறது!மொத்த படைப்பையும் சுமந்திருக்கிறது சக்திஸ்ரீ கோபாலனின் பின்னணி இசை! குமுதாவின் அழுத்தத்தால் சரவணனின் வாழ்க்கை மாறிவிட்டதை விவரிக்கும் காட்சி மட்டும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. 'வாழ்க்கை தரும் சோதனைகளை உறுதியோடு எதிர்த்துப் போராடு' என்ற எளிய கருத்தை எளிமையாக சொல்லாதது இப்படைப்பின் பெரும் பிரச்னை.ஆக...பொறுமையின் சிகரமான ஆர்.சி.பி., ரசிகர்களுக்கு இந்த டெஸ்ட் பிடிக்கக்கூடும்!