உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: இக்கிஸ் (ஹிந்தி)

இப்படம், 1971ம் ஆண்டு 'இந்தியா - பாகிஸ்தான்' போரில் வீரமரணம் எய்திய... ஏய் நிறுத்து... வழக்கம்போல ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறை மெச்சும் பாலிவுட் படம்; அதானே? இல்லை... செகண்ட் லெப்டினன்ட் அருண் கேதர்பால் போரில் வீரமரணம் அடைந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை பாகிஸ்தான் செல்கிறார். மகனின் உயிர் பிரிந்த போர்க்களமான பசன்டருக்கு அவரை அன்போடு அழைத்துச் செல்வது, அருணின் மரணத்திற்கு காரணமான முன்னாள் பாகிஸ்தான் வீரர் நிசார். 'போரில் மகனை இழந்த பெற்றோர்கள், தன் உடல் ஊனமுற்றவர்கள் என இரு தேசத்திலும் போரின் மனக் காயங்களை சுமப்பவர்கள் உண்டு' என்று இக்காலத்தில் ஒரு திரைப்படம் பேசுவது ஆச்சரியம். பீரங்கி டாங்கிகளை கொண்டு நிகழும் மோதல்கள், அதற்குரிய வியூக முறைகள், கிடா வெட்டி பீரங்கிக்கு ரத்த திலகமிடும் சம்பிரதாயம் என, யுத்தத்தில் பீரங்கி டாங்கிகளின் பங்களிப்பு விதத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், எந்த இடத்திலு ம் போர் வெறியை தேசப் பற்றாக உணர விடாமல், மனிதநேயம் பக்கம் நின்று இயக்கியுள்ளார் ஸ்ரீராம் ராகவன். தேசப்பணி செய்த நேர்மை ஒருபுறம், அருண் தந்தையின் கண்களை எதிர்கொள்ள முடியாத குற்றவுணர்வு மறுபுறமாக நிசார் பாத்திரத்தில் ஜெய்தீப் அஹ்லாவத், நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அருணின் தந்தையாக தர்மேந்திரா; தனது முதுமையின் பலவீனத்தை, மகனை பறிகொடுத்த தந்தையின் வலியாக மடைமாற்றி மனதில் தங்குகிறார். 'தேசத்திற்காக... எனும் சொல்லை ஒரு செயலுடன் இணைக்கும் போது அது வீரமாகவும், பெருமை ஆகவும் தெரியும். ஆனால், தனித்தனி மனிதர்களாக ஒவ்வொருவரும் சந்திக்கும் இழப்புகளை அது மறைத்து விடுகிறது' என்ற பெருஞ்செய்தியைச் சொல்லி, போர் இல்லா உலகு படைக்கும் ஆசையை துாண்டுகிறது இக்கதை. ஆக...'உலக தலைவர்களே... எப்போது மனிதர்களாக மாறுவீர்கள்' என்று கேட்கிறது படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !