உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் சங்கம்

நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் சங்கம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் சங்கம் பதிவு என்பது அவசியமான ஒன்று. இதற்கென, தமிழ்நாடு அபார்ட்மென்ட் உரிமையியல் சட்டம், 2022 மற்றும் விதிகளை உருவாக்கியது. ஆனால், இச்சட்டம் 2024ல்தான் அமல்படுத்தப்பட்டது.பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள பொது இடங்களையும், வசதிகளையும் சங்கம் வாயிலாக பராமரிக்கும் நடைமுறை இருந்துவருகிறது. இந்த சங்கங்களை எவ்வாறு அமைப்பது, பதிவு செய்வது என்பது குறித்து அரசு, தமிழ்நாடு அபார்ட்மென்ட் உரிமையியல் சட்டம், 2022 மற்றும் விதிகளை உருவாக்கி தந்துள்ளது.இதன் வாயிலாக, பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியான வாழ்வுக்கு வழி பிறந்துள்ளது. நான்கு மற்றும் அதற்கும் கூடுதலாக அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட கட்டடங்கள் கட்டாயம் சங்கம் பதிவு செய்வது அவசியம். இதில் பதிவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.புதிய கட்டுமானங்களுக்கு இரண்டு கட்ட பதிவு அவசியமாகிறது. முதலில் கட்டடத்தில் உள்ள பொது இடங்கள், வசதிகள், உரிமையாளர்கள், அபார்ட்மென்ட் பரப்பு, பிரிபடாத நில பங்கு, வாக்கு சதவீதம் பற்றிய விவரங்களை படிவம் 'அ' வாயிலாக உறுதி ஆவணமாக மாவட்ட சங்க பதிவாளரிடம் கட்டணம் செலுத்தி பதிவிட வேண்டும்.பொது வசதிகள் எவர் வசம் உள்ளதோ, அவரே உறுதி ஆவணம் அளிக்க வேண்டும். பெரும்பான்மையான உரிமையாளர்கள் கையெழுத்திட வேண்டும். அரசே மாதிரி 'பை லா' உருவாக்கி அளித்துள்ளதால் இது மிகவும் எளிது. பதிவுக்கு பின் சான்று அளிக்கப்படும்.கோவையை பொறுத்தவரை வடக்கு, தெற்கு என, இரு பதிவு அலுவலகங்கள் உள்ளன. வடக்கு அலுவலகம் சிரியன் சர்ச் ரோட்டிலும், தெற்கு அலுவலகம் கிராஸ் கட் ரோட்டிலும் உள்ளன. இங்கு பொது மக்கள் அணுகலாம்.அனைத்து பதிவுகளும், இணையதளம் வாயிலாகவே நடக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, தளம் தயாராகும் வரை 'மேனுவல்' முறையில் நேரடியாக பெற்று பதிவிடுமாறு, பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பதிவு கட்டணத்தை, tnreginet.gov.inஎனும் பதிவுத்துறை இணையதளம் அல்லது karuvoolam.tn.gov.inஎனும் கருவூல இணையதளம் வழியாகவும் செலுத்தலாம். மக்கள் அலைச்சலை தவிர்த்து இதன் வழியாக பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ