சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியில், 2,200 மனைகளுடன் புதிய மனைப்பிரிவு திட்டத்தை 'புரவங்கரா' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் புரவங்கரா நிறுவனம். சென்னையில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, திருமழிசையில் இசையை கருப்பொருளாக கொண்டு, பூர்வ ராகம் என்ற குடியிருப்பு திட்டத்தை இந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியது.இதை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியில் புதிய மனைப்பிரிவு திட்டத்தை இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆரோக்கியம் என்பதை கருப்பொருளாக கொண்டு 'பூர்வ சவுக்கியம்' என்ற பெயரில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இங்கு, 120 ஏக்கர் பரப்பளவில், 600 முதல், 5,000 சதுர அடி வரையிலான வெவ்வேறு அளவுகளில், 2,200 மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் நுகர்வோர் தேவையை கருத்தில் வைத்து, 80 சதவீத மனைகளை, 800 முதல், 1,800 சதுர அடி அளவிலேயே உருவாக்கி உள்ளனர்.இது குறித்து புரவங்கரா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் கபூர் கூறியதாவது:பூர்வ சவுக்கியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள மனைப்பிரிவு திட்டத்தில், மக்களுக்கு சவுகர்யமான, சீரான வாழ்க்கை முறை ஏற்படுத்தி தரப்படுகிறது. சென்னையில் திட்டமிட்ட வசதிகளுடன் அமையும் குடியிருப்புகளுக்கு முன்னுதாரணமாக இத்திட்டம் அமையும். இங்கு, உடற்பயிற்சி, யோகா, தியான வகுப்புகளுக்கான இடங்கள், ஊட்டச்சத்து ஆலோசனை மையம், விளையாட்டு மைதானங்கள், பசுமை பகுதிகள், நடைபயிற்சி, சைக்கிள் வழித்தடம் ஆகியவை சிறப்பு வசதிகளாக அமையும்.ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, 10 நிமிட பயணத்தில் இந்த மனைப்பிரிவு வளாகத்துக்கு வந்துவிடலாம். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இத்திட்டம், 2027ல் மக்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.