கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: அது ஒரு கனாக் காலம்!
பாலிவுட் நடிகை, கீதா கபூர், தன் சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்டு, இறந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடவுளுக்கு இணையாக முதியவர்களை கருதிய காலம் ஒன்று இருந்தது; தற்போது அது மாறி விட்டது.சென்னை, புரசைவாக்கத்தில், எனக்கு தெரிந்த, 70 வயதை கடந்த முதிய தம்பதி, சொந்த வீட்டின் கீழ் தளத்தில் வசித்தனர். முதல் தளத்தில், இவர்களின் திருமணமான மகன், குடும்பத்துடன் இருந்தான். கணவர் இருந்தவரை, மனைவி எல்லா வேலைகளையும் தானே செய்தார்; கணவர் இறந்த அதிர்ச்சியில், மாரடைப்பு வந்துவிட, அவரால் வழக்கமான வேலைகளைக் கூட செய்ய முடியவில்லை. 'சாப்பாடு மட்டும், எனக்கு தினமும் கொடுத்துடுப்பா' என, மகனிடம் கேட்டார்.சில நாட்கள் சாப்பாடு தந்த மகன், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதால், வீட்டை தன் பெயருக்கு எழுதித் தரும்படி, நச்சரிக்கத் துவங்கினான். 'நான் இறந்த பின், வீடு உனக்கு தானே... இப்ப என்ன அவசரம்?' என, மறுத்தார் தாய். 'இப்படியே மறுத்து வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக உணவில் விஷம் வைத்து, கொன்று விடுவேன்' என மிரட்டவே, பயந்து, தற்போது தினமும் ஓட்டலில் வாங்கி சாப்பிடுகிறார்.'டாக்டர் ஐயா... எனக்கு, 72 வயதாகிறது. என் மனைவி இறந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிறது. மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டேன்; மகனுடன் இருக்கிறேன். என்னுடன் சரியாக பேச மாட்டான்; ஏதாவது கேட்டாலும், ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வான். மருமகள் தரும் சாப்பாட்டை ஏதாவது குறை சொன்னால், அடுத்த வேளை சாப்பாடு தர மாட்டாள். என் பென்ஷன் பணம், 5,000 ரூபாயை, 1ம் தேதியே வாங்கிக் கொள்வான்.'என் கை செலவிற்கு பணம் கேட்டால், 'சாப்பாடு, தங்க இடம் இருக்கிறது; பணம் எதற்கு... உனக்கு, எங்களோடு தங்க விருப்பம் இல்லாவிட்டால், முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன்' என்று சொல்கிறான்' என்றார்.சென்னை, அரசு பொது மருத்துவமனையில், முதியோர் பிரிவு ஆரம்பித்து சில நாட்கள் ஆன நிலையில், உதவிக்கு யாரும் இல்லாமல், முதியவர் ஒருவர், 'அட்மிட்' ஆகியிருந்தார். நர்சிடம் விசாரித்ததில், சென்ட்ரல் ஸ்டேஷனில், மயக்க நிலையில் இருந்தவரை, யாரோ இங்கு கொண்டு வந்து சேர்த்ததாக கூறினார். நிமோனியா பாதிப்பு இருந்தது; தொடர் சிகிச்சையால் இரண்டு நாட்களில் நிலைமை சீரானது.விசாரித்ததில், 'தன்னுடைய ஒரே மகன் டில்லியிலிருந்து, ராமேஸ்வரம் கூட்டிச் செல்வதாக கூறி, அழைத்து வந்ததாகவும், சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கிய போது, தனக்கு மயக்கம் ஏற்பட்டதால், காபி வாங்கி வருகிறேன் என்று சென்ற மகன், திரும்பி வரவே இல்லை; தேடவும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை' என்றார்.'என்னை ஒரேயடியாக தலை முழுகுவதற்காகவே அழைத்து வந்திருக்கிறான்' என்று சொல்லி, குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதார்.வருமானமோ, சொத்தோ இல்லாமல், முழுவதும் பிள்ளைகளை நம்பி இருக்கும் முதியவர்கள், ஒரே பிள்ளையைப் பெற்றவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், எல்லாத் தேவைகளுக்கும், மற்றவர்களையே அதிகம் நம்பி இருக்கும் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முதியவர்களுக்கு உதவ, 1253 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ள லாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், 1800 180 1253 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.டாக்டர் வி.எஸ்.நடராஜன்,முதியோர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.dr_v_s_natarajan@yahoo.co.in