""மெட்ராஸ் ஐ பரவுகிறது ஜாக்கிரதை
நாம் எதை கண்டு அதிகம் பயப்படுகிறோம்? இறப்பு, புற்றுநோய், கண் பார்வை பறிபோகுதல், இப்படி... கண்ணில் கோளாறு ஏற்பட்டால், உடனே டாக்டரிடம் ஓடுகிறோம்.தற்போது மெட்ராஸ் / டில்லி/ கோல்கட்டா ஐ என்றழைக்கப்படும் கண் நோய் (தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ) ஆங்கிலத்தில், 'கன்ஜங்டிவிட்டிஸ்' என்றழைக்கப்படுகிறது. இது, காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் தன்மை கொண்டால், மக்கள் கவலை கொள்கின்றனர். கண் சிவப்பாவது மட்டுமல்லாமல், அரிப்பு, வீக்கமும் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்ற அனைவருக்கும், பள்ளியில் ஒரு மாணவருக்கு வந்தால், அனைவருக்கும் தொற்றும் தன்மை கொண்டது இது.ஒவ்வாமை, தொற்று, வெளிப் பொருட்கள் படிதல், நீர் சுரக்கும் துளையில் அடைப்பு ஏற்படுதல் ஆகிய காரணங்களால், விழியின் மேல் படலம் சிவப்பாகிறது. மேலே கூறிய காரணங்களால், மேல் படலத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் வீக்கமடைவதால், சிவப்பு நிறம் தெளிவாகத் தெரிகிறது. தொற்று அதிகமானால், வீக்கம் இன்னும் அதிகரிக்கும். கண்ணில் உறுத்தல், அரிப்பு ஏற்பட்டு, கண்ணிலிருந்து வெள்ளை நிறக் கழிவு வெளியேறும். கண்ணில் நீர் வரும்.தொற்றினால், 'மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அடினோ அல்லது இன்ப்ளுயென்சா வைரஸ் தொற்று இது. சிலருக்கு, இந்த உபாதையுடன் கூட, தொண்டை வறட்சி, சளி பிடிக்கலாம். எனினும், இவற்றுக்கு சிகிச்சை தேவையில்லை; மூன்று அல்லது நான்கு நாட்களில், தானாகவே சரியாகி விடும். சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுப்பது, கண்ணுக்கு இதம் அளிக்கும். பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கண்ணிலிருந்து வெளிப்படும் கழிவு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சொட்டு மருந்து ஊற்ற வேண்டும். இரவு நேரங்களில், களிம்பு போட வேண்டும்.வைரஸ் அல்லது பாக்டீரியா பாதிப்பால் ஏற்படும் கண் தொற்று, வெகு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. வகுப்பறைகளில், ஒரு கூட்டத்தினரிடையே, ஒரு வீட்டில் என, ஒருவருக்கு ஏற்பட்டால், மற்ற அனைவருக்கும் ஏற்பட்டு விடும்.ஆனால், கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பார்த்தாலே, நமக்கும் கண் நோய் ஏற்படும் என்று கருத வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்ணில் கையை வைத்து, அதே கையால் மேஜை, நாற்காலி, பலரும் பயன்படுத்தும் பொருட்களை தொட்டால், அவற்றை நாம் தொட்டு, அதே கையால் நம் கண்ணையும் தொடும்போது தான் தொற்று ஏற்படுகிறது. 'கூலிங் கிளாஸ்' அணிவது, நம் கையை கண் அருகில் கொண்டு செல்லாமல் இருக்க மட்டுமே தவிர, இந்த கண்ணாடி தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் எனக் கூற முடியாது.தொற்று ஏற்பட்டால்,* கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள்.* அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.* தினமும் கைக்குட் டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள்.* தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள்.* கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.* கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து, கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது. * பேபி ஷாம்பூ ஒரு சொட்டு, தண்ணீர் 10 சொட்டு சேர்த்து கலந்து, அதன் மூலம் கண்ணுக்கு வெளியே உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.* தொற்று முற்றிலும் நீங்கும் வரை, 'கான்டாக்ட் லென்ஸ்' அணியக் கூடாது.குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம்.* குழந்தை பிறக்கும் நேரத்தில், வயிற்றிலிருந்து வெளியே வரும் பாதையில் உள்ள கழிவுகள் கண்ணில் படர்ந்து, பாதிப்பு ஏற்படலாம். பிறந்த குழந்தையின் கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி, இந்த பாதிப்பை சரி செய்து விடலாம்.பழங்காலத்திலேயே, மக்கள் இதை அறிந்திருந்தனர். அவர்கள், குழந்தை பிறந்ததும், தாய்ப்பால் எடுத்து, குழந்தையின் கண்ணில் ஊற்றிச் சுத்தம் செய்வர். தாய்ப்பாலில், 'இம்யூனோகுளோபுலின்' சத்து அடங்கி இருப்பதை இப்போது நாம் கண்டறிந்துள்ளோம்.சில குழந்தைகளுக்கு, நீர் வடியும் துளை அடைத்துக் காணப்படும். குழந்தை வயிற்றில் உருவாகும் போது, இந்தத் துளை முறைப்படி வளர்ச்சி அடையாமல் போயிருக்கலாம் அல்லது பிறக்கும் போது, கழிவுகள் துளையில் சிக்கியிருக்கலாம். எனவே, கண்ணில் தொடர்ந்து தண்ணீர் வடியும் நிலை ஏற்படும்; தொற்றும் ஏற்படும். 1 வயது நிறையும் போது, இந்த பாதிப் பிலிருந்து விடு பட்டு விடலாம்.எல்லா கண் நோய்களும், தொற் றினால் மட் டுமே ஏற்படுவதல்ல. மகரந்தத் தூள், தூசி, ரசாயனங் களை எதிர்க்க, நம் உடலில், 'இம்யூ னோகுளோபு லின் இ' நோய் எதிர்ப்பு சத்து சுரக்கும். இதைத் தவிர, கண்ணை பாதுகாக்க, கொழகொழப் பான திரவமும், ஹிஸ்டாமைன் என்ற ரசாயனமும் கண்ணில் சுரக்கும். இவை, கண்ணை விட்டு வெளியே வழியத் துவங்கும். இதனால், தும்மல், சளி ஆகியவை ஏற்படலாம்.'சோடியம் குரோமோ கிளை கேட்' அடங் கிய, ஸ்டிராய்டு கலக்காத சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால், இந்த உபாதைகள் நீங்கும். கடைகளில் விற்கப்படும் மருந்துகள் விரைவான பலனைக் கொடுப்பதாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் ஒவ்வாமை அதிகரித்து, கண்ணை பாதித்து விடும். எனவே, இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.நீச்சல் குளத்தில் உள்ள குளோரின், உடலுக்கு தேய்க்கும் சோப்பு, துணிக்குப் போடும் சோப்பு ஆகியவற்றாலும் கண்ணில் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு, குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். கண்ணில் தூசி விழுதல், வேறு துகள்கள் விழுதல், இமை முடி கண்ணுக்குள் சென்று விடுதல் ஆகியவற்றால், கண்ணில் உறுத்தல் ஏற்படும். இது போன்ற உபாதைகளை நீங்களாகவே கையாளாமல், கண் மருத்துவ ரிடம் காண்பிப்பது நல்லது.