உள்ளூர் செய்திகள்

எளிதாக தடுக்க முடிகிற கேன்சர்!

உலக ஜீரண மண்டல அமைப்பின் சர்வதேச மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு நாட்டில் நடைபெறும். இந்த ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் நடந்தது. இதில், டாக்டர் கே.ஆர்.பழனிசாமிக்கு, இத்துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்கான, 'மாஸ்டர்' விருது வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்படும் இவ்விருது, உலகம் முழுதும் மிகச் சிறந்த ஜீரண மண்டல சிறப்பு டாக்டர்கள் எட்டு பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில், ஆசிய - பசிபிக் கண்டத்தில் இருந்து விருது பெற்ற ஒரே டாக்டர், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி. இத்துறையில் டாக்டரின் திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஆராய்ச்சி, பயிற்றுவித்தல், பயிற்சி அளித்தல், சேவை, நம்பகத்தன்மை என, பல பிரிவுகளிலும் திறம்பட செயல்படும் டாக்டர்களுக்கு வழங்கப்படும் விருது இது!அறுபதாயிரம் தனி நபர் டாக்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட, உலக ஜீரண மண்டல அமைப்பின் சார்பாக, பல்வேறு செயல்பாடுகள் உலகம் முழுதும் நடக்கின்றன. அது பற்றி, டாக்டர் கே.ஆர்.பழனிசாமி பகிர்ந்து கொள்கிறார்...வளர்ச்சியடையாத மூன்றாம் தர நாடுகளில், மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. அங்கு, இந்த அமைப்பின் சார்பாக மையங்களை துவக்கி, மருத்துவ கல்வி, விழிப்புணர்வு போன்ற பல நடவடிக்கைகளை செய்கின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து டாக்டர்கள் சென்று, அங்கிருக்கும் டாக்டர்களுக்கு பயிற்சி தருவது, இந்த துறையில் உள்ள சிறப்பு டாக்டர்களுக்கு சில திறமையின்மை இருக்கும். அதை சரி செய்வதற்கான, 'டிரெய்ன் தி டிரெய்னர்' என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும், உலகின் ஏதாவது ஒரு நாட்டில் பயிற்சி முகாம் நடத்துகின்றனர். நம் நாட்டில், 2017ல் இந்த பயிற்சி முகாம், சென்னையில் என் தலைமையில் நான்கு நாட்கள் நடந்தது; இதில், உலகின் பல நாடுகளில் இருந்தும், 25 டாக்டர்கள், 10 பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.

உலக செரிமான நாள்

மே 29ல் அனுசரிக்கப்படும். இதில் டாக்டர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, குறிப்பிட்ட கருப்பொருளை ஒவ்வொரு ஆண்டும் மையமாக வைத்து நடத்தப்படும். இந்த ஆண்டின் கருப்பொருள், 'பெருங்குடல் - மலக்குடல் கேன்சர்!' இதில், பொதுமக்களுடன் கலந்துரையாடல், பொது மருத்துவர்களுடன் ஆலோசனை என, பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.குறிப்பிட்ட இந்த கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். காரணம், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். அமெரிக்காவில், 50 வயதிற்கு மேல், 'கோலோனோஸ்கோபி' என்ற பரிசோதனை கட்டாயம் என்றிருந்ததை தற்போது, 45 வயதாக குறைத்து விட்டனர். காரணம், இதில், ஆரம்ப நிலையில் உள்ள 'பாலிப்ஸ்' எனப்படும் சிறு கட்டிகளை கண்டறிந்து, அகற்ற முடியும். இதை அப்படியே விட்டு விட்டால், நாளடைவில் கேன்சராக மாற வாய்ப்புகள் அதிகம். தவிர, இந்த பரிசோதனை செய்யும் போது, ஆரம்ப நிலையில் இருக்கும் கேன்சர் கட்டியையும் அகற்றி விட முடியும். பெருங்குடல் - மலக்குடல் கேன்சரை தடுக்க, சிகிச்சை செய்ய, முழுமையாக குணப்படுத்த முடியும்.

ஜீரண அறிகுறிகள்

நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், மலம் கழிப்பதில் சிரமம், வயிற்றுப் போக்கு போன்ற பல்வேறு பொதுவான ஜீரணக் கோளாறு அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஊட்டியில் 'மாரத்தான்' ஓட்டம் நடத்தினேன்; முடிந்ததும், பங்கு பெற்ற பொதுமக்களுடன், 'கேள்வி நேரம்' நடத்தி, சந்தேகங்களை நிவர்த்தி செய்தேன். இதே போன்று கல்லீரல் கேன்சர் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு சொல்வதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் நடை பயணம் செய்தேன்.இது போன்று, நேரடியாக பொதுமக்களுடன் கலந்து பேசும் போது, செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியாகி, மலம் கழிக்கும் போது ரத்தம் வந்தால், மூலம் என்று அலட்சியமாக இருந்தவர்கள், இதன் பின் ஆரம்ப அறிகுறி களின் போதே பரிசோதனைக்கு வருகின்றனர்.

ஐ.பி.எஸ்., - ஐ.பி.டி.,

மேற்கத்திய நாட்டில் போதிய அளவு தண்ணீர் குடிப்பதில்லை; அசைவம், பிரட், ரொட்டி போன்ற நீர் சத்து குறைந்த உணவுகள் அதிகம் என்பதால், மலச்சிக்கல் பிரச்னை அவர்களிடம் அதிகம். இப்பிரச்னை இருந்தால் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகம். நம் உணவு முறை வேறு என்பதால், பெருங்குடல் கேன்சர் இல்லை என்று நினைத்தோம். நம்முடைய உணவு பழக்க வழக்கங்களும், மேற்கத்தியர்கள் போல மாறிவிட்டன. பதப்படுத்திய உணவு சாப்பிடுகிறோம்; போதிய அளவு நீர் குடிப்பதில்லை; உடற்பயிற்சி செய்வது கிடையாது; துாங்குவது இல்லை. விளைவு, கடந்த சில ஆண்டுகளில் குடல் பிரச்னைகள், பெருங்குடல் கேன்சர் பாதிப்பு அதிகரித்து உள்ளது. நம் நாட்டில், ஒரு காலத்தில் அதிகம் இருந்த தொற்று நோய்கள் குறைந்து, இப்போது அடிக்கடி மலம் கழிப்பது, வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகளுடன், 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' - ஐ.பி.எஸ்., அதிகம் உள்ளது. இத்துடன், 'இன்பிளமேட்டரி பவல் டிசீஸ்' - ஐ.பி.டி., எனப்படும், குடலில் புண் வருவது அதிகரித்து உள்ளது. இதில், மலக்குடல் மட்டும் பாதிக்கப்பட்டால், மலம் கழிக்கும் போது ரத்தம், சளி வரும். ரத்தம் வந்தால் மூலம் என்று நினைக்கக் கூடாது; அது ஐ.பி.டி.,யாகவும் இருக்கலாம். இப்பிரச்னை, பொதுவாக சிறுகுடலின் கடைசிப் பகுதியை பாதிக்கும். சிலருக்கு ஜீரண மண்டலத்தில் எந்த இடத்திலும் பாதிக்கலாம். பிரச்னை உறுதியானால், வாழ்நாள் முழுதும் சிகிச்சை தேவைப்படலாம்.இது போன்று புண் வந்தால் வயிற்றில் வலி, உப்புசம், பசி, உடல் எடை குறையும். தீவிர நிலையில் காய்ச்சல் வரும். இதற்கு தீர்வு, வாழ்க்கை முறை மாற்றம். வீரியம் அதிகமுள்ள விலை உயர்ந்த மருந்துகள் தேவைப்படும், சிக்கலான பிரச்னை இது. போதிய துாக்கம் இல்லாதது, துரித உணவு, மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் ஐ.டி., ஊழியர்கள், கல்லுாரி மாணவர்களிடையே ஐ.பி.டி., அதிகரித்து உள்ளது.பெருங்குடல் கேன்சர் அறிகுறிகள்: சாதாரணமாக, ஜீரண மண்டலத்தில் எந்தப் பகுதியிலும் கட்டி வரலாம். ஆனால், பெருங்குடலின் இடது புறம் கீழ் பகுதியில் கட்டி வந்தால், மலத்தில் ரத்தம், சளி வரலாம். அடிக்கடி மலம் கழிப்பது, சில நாட்களில் இயல்பாக போவது, எதிர்பாராமல் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என்று மலம் கழிப்பது ஒழுங்கில்லாமல் இருக்கும். உடல் எடை குறையலாம். மலத்தில் ரத்தம் வந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை தேவை. பெருங்குடலின் வலதுபுறம் சற்று வீங்கி இருக்கும்; எனவே, கட்டி வந்தால், உடனடியாக வெளியில் தெரியாது. கட்டி வளரும் போதும், அறிகுறிகள் இருக்காது. இந்நிலையில், கண்ணுக்கு தெரியாமல் உள்ளேயே ரத்தம் கசியும். இதனால், சிலர் பலவீனமாகி, ஹீமோகுளோபின் குறையும். இடது பக்கம் வரும் கட்டியை கவனிக்காமல் விட்டால், குடலில் அடைப்பு ஏற்படலாம்.அறிகுறிகள் பல நாட்கள் இருந்தால், 'அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்...' என்று அலட்சியமாக இல்லாமல், ரத்தம் வந்தாலே, உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை, முழு மருத்துவ பரிசோதனை செய்வது பாதுகாப்பானது.டாக்டர் கே.ஆர்.பழனிசாமி,ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.98414 14500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !