உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்

குழந்தைகள் முன், பெற்றோர் சண்டை போடுவது, 'படி... படி...' என, நெருக்கடி கொடுப்பது, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். தினமும், விதவிதமான சிப்ஸ், சாக்லெட் கொடுப்பதும் உடல் நலனை பாதிக்கும்1. பள்ளி செல்ல குழந்தைகள் அடம் பிடிப்பது ஏன்? அதைத் தடுக்க என்ன செய்வது?குழந்தைகள் பழகிய இடத்தை விட்டு (வீடு), புதிய இடத்திற்கு (பள்ளி) செல்லும் போது. மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அழுதல், அடம் பிடித்தல், பொருட்களை உடைத்தல், படுக்கையில் - தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், அலறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். வற்புறுத்தி, அடித்து பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.பள்ளிக்கு கிளப்புவதில், அவசரம் காட்டாமல் குழந்தை விருப்பப்படி, விளையாட்டுடன் தயார் செய்ய வேண்டும். அன்பாக பேசி, அவர்களின் பயத்தை போக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் தான், இந்த பிரச்னை இருக்கும் என்பதால், சின்ன சின்ன பரிசு, இனிப்பு போன்றவை கொடுத்து, பயத்தைப் போக்கி, ஊக்கப்படுத்தலாம்.2. குழந்தைகள், மூட்டை போல், புத்தக பை சுமந்து செல்வது, உடல் நலத்தை பாதிக்கும் தானே?அதில் என்ன சந்தேகம்? இன்று, குழந்தைகள் பொதி சுமப்பது போல், புத்தகப் பை சுமந்து செல்கின்றனர். பார்க்கவே பாவமாக இருக்கிறது. எந்த பள்ளியிலும், எல்லா புத்தகம், நோட்டுக்களை சுமந்து வர வேண்டும் என, கட்டாயப்படுத்துவதில்லை. அன்றைய தினத்திற்கான பாடப் புத்தகத்தை மட்டும், எடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து, புரிதலை பெற்றோரிடம், பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான வீடுகளிலும், அப்பா - அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதும், ஒரு பிரச்னை. புத்தகப்பை சுமந்து செல்வதால், எளிதில் சோர்வு ஏற்பட்டு, பக்க விளைவுகள் வரும்; முதுகு தண்டு பாதிப்பு, கூன் வரவும் வாய்ப்புள்ளது.3. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, எந்த மாதிரியான நோய்கள் வரும்?தற்போது, பெரும்பாலான பள்ளிகள், குளிர்விக்கப்பட்ட அறைகளாக உள்ளன. இதன் காரணமாக, ஒரு குழந்தைக்கு கண் வலி, காய்ச்சல், தோல் வியாதிகள் வந்தால், அது, மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது. 'விடுப்பு கிடையாது; பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும்' என, கெடுபிடிகள் விதிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, விடுப்பு கொடுத்து, உடல் சீரானதும் பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும்.4. படிக்கும் வயதில் விளையாட்டு அவசியமா என, திட்டுகின்றனரே... விளையாட்டு அவசியமில்லையா?விளையாட்டு மிக அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, சத்தான உணவுடன், விளையாட்டும் அவசியம். இன்று, வீடுகளில், 'டிவி' பார்த்து, 'ஸ்நாக்ஸ்' சாப்பிடுவது, 'வீடியோ கேம்ஸ்' கம்ப்யூட்டரில் மூழ்குவதுதான் விளையாட்டு என்ற நிலை உள்ளது. வீட்டின் வெளிப்புற பகுதிகளில், மற்ற சிறார்களுடன் விளையாட, அனுமதிக்க வேண்டும். கிரிக்கெட், புட் பால், ஓடி விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல் நலம். விளையாடுதல் உடல் உற்சாகம் பெறுவதோடு, புத்தி கூர்மையையும் உருவாகும்.5. அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, பெற்றோர் நெருக்கடி கொடுப்பது சரியான நடைமுறையா?குழந்தைகள் படிப்பதற்கு, ஆரம்ப நிலையில் இருந்தே ஊக்கப்படுத்தினால் போதும்; நல்ல மதிப்பெண் கிடைக்கும். தேர்வு நேரம் வந்ததும், படி படி என, பெற்றோரும், ஆசிரியர்களும் நெருக்கடி தருகின்றனர். அவ்வாறு செய்வது கூடாது. இதனால், மன அழுத்தம் அதிகரிக்கும்; எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடும். எப்போதும், புத்தகமும், கையுமாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. இடையில், விளையாட்டு, உடற்பயிற்சி செய்யலாம்.6. தினமும் சிப்ஸ், நூடுல்ஸ் கேட்டு, குழந்தைகள் அடம்பிடிக்கின்றனர்; அதை தொடர்ந்து கொடுப்பது சரியா?பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, 'ஸ்நாக்ஸ்' டப்பாக்களில், விதவிதமான, 'சிப்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். இது ஆபத்தானது. சிப்ஸ்களில் 'அசினமோட்டோ' என்ற, வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்று வலி வரும். அதுபோன்று, நூடுல்ஸ், பிசா, பர்கர் என, உணவு பழக்கத்தில் மாற்றம் நல்லதல்ல; பாட்டில்களில் அடைத்து வரும் குளிர்பானங்கள் கொடுப்பதும் தவறு. குழந்தைகளுக்கு 'பிரஸ் ஜூஸ்' தரலாம்.7. சிறு வயதிலேயே, 'டயட்' உணவு முறை சிறந்தது தானே? எதிர்கால நோய்களை, தடுக்க முடியும் அல்லவா?மிகத் தவறான தகவல். சர்க்கரை நோயாளிகள் உள்ள வீடுகளில், சப்பாத்தி, ஓட்ஸ் கஞ்சி உணவாக இருக்கும். இரவில், குழந்தைகளுக்கு அதைக் கொடுத்து, உணவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக் கூடாது. வயிறு நிறைய உணவு கொடுப்பது அவசியம். நடுத்தர வயதில் பலவிதமான பாதிப்புகள் வரும் என்று கருதி, சிறு வயதிலேயே, உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பது, ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அவ்வாறு செய்வது, விளையாட்டான விஷயம் அல்ல. குழந்தை பருவத்தில், சிறு வயதில் சீர்விகித உணவு அவசியம். கேழ்வரகு, கோதுமை உணவுகள், கீரை, மீன், முட்டை, இறைச்சி, பால் அன்றாடம் கொடுப்பது நல்லது.8. தினமும் சாக்லெட் சாப்பிடுவது சரியா? அவசரம் என, காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் பள்ளி செல்கின்றனரே?தினமும் சாக்லெட் சாப்பிடுவது நல்லதல்ல. கலோரி அதிகம் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும். சாக்லெட் சாப்பிட்டு, அப்படியே படுத்து விடுவர். இதனால் பல்சொத்தை வர வாய்ப்பு உள்ளதால், உறங்குவதற்கு முன், பல் துலக்குவது நல்லது. விளையாடி விட்டு வரும் குழந்தைகள், சரியாக கை கழுவாமல் சாப்பிட வாய்ப்புள்ளது; அவர்கள் குளித்த பின், சாப்பிட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, குடல் புழு நீக்கும் மருந்து கொடுத்தல்; உரிய காலத்தில் தடுப்பூசிகளும் போட வேண்டும். அவசரம் என, காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் செல்வதால், கவனக்குறைவு ஏற்படும்; அல்சர் வர வாய்ப்புள்ளது. கவனமுடன் இருக்க வேண்டும்.9. குழந்தைகள் முன் சண்டை போடுதல், இரவில் குழந்தைகளை தனியாக தூங்க வைத்தல் போன்றவை, சரியான நடைமுறைகளா?பெரும்பாலான வீடுகளில், குழந்தைகள் முன், பெற்றோர் சண்டை போடுவது; நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது, வழக்கமாக நடந்து வருகிறது. குழந்தைகள் முன், எந்த நிலையிலும் பெற்றோர் சண்டை போடக்கூடாது; அது, பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பதாக அமையும். பிரச்னைகளை, குழந்தைகள் இல்லாத போதோ, தூங்கிய பின்போ பேசி தீர்வு பெறலாம். இரவு நேரத்தில், குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கக் கூடாது. அவர்கள் மனதில் பயம் உருவாகும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வேண்டுமானால், தனியாக படுக்க வைக்கலாம். மொத்தத்தில், குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டக் கூடாது.டாக்டர் ஆர்.நாராயண பாபு, பேராசிரியர், குழந்தைகள் நலம்,கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்