சோயா புரதம் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்குமா?
சோயா பருப்பில் இருந்து கொழுப்பு முழுதும் நீக்கப்பட்ட பின் கிடைக்கும் 'சோயா சங்க்ஸ்' எனப்படும் சக்கை துண்டுகள், தாவரப் புரதம் நிறைந்த உணவு. எல்லா பருப்பு வகைகளை விடவும் இரண்டு மடங்கு அதிக புரதம் சோயாவில் உள்ளது. பாசிப் பருப்பு போன்ற பயறு வகைகளில், 100 கிராமிற்கு 20 கிராம் புரதம் இருந்தால், அதே அளவு சோயாவில் 50 - 80 கிராம் புரதம் உள்ளது.மிகக் குறைந்த அளவு மட்டுமே திரவக் கொழுப்பு உள்ள சோயாவில் சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், ஜிங்க், மாங்கனீசு, செலீனியம், இரும்பு போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களும், இத்துடன், ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கக்கூடிய ஒரே புரத உணவு சோயா. தினசரி தேவையில், 100 கிராம் சோயா சாப்பிட்டால், 40 சதவீத புரதம் நமக்கு கிடைத்து விடும்.ஐசோபிளாவின் அல்லது பைட்டோ ஈஸ்ட்ரோஜென் எனப்படும் தாவர ஈஸ்ட்ரோஜென் உள்ளது. சோயா சாப்பிடும் போது, நம் உடம்பில் உள்ள ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை அதிகப்படுத்தி, டெஸ்ட்ரோஸ்டீரானை குறைக்கும். இதனால், ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரு ஆய்வுகள் நடத்தப்பட்டன.ஒன்று எலிகளிடமும், மற்றது மனிதர்களிடமும் செய்ததில், இரண்டிலும் வழக்கமாக சாப்பிடும் சோயாவை காட்டிலும் 5 - 10 மடங்கு சோயா அதிகம் தரப்பட்டது.இதில், மிகச் சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதை பார்க்க முடிந்தது. அதே சமயத்தில், தினமும் சோயா சாப்பிடும் போது எந்த பாதிப்பும் வரவில்லை என்பதை, 15 ஆண்டுகள் உறுதி செய்துள்ளன.வேறு எந்த உடல் பாதிப்புகளும் வரவில்லை. அதிகப்படியான சோயா பயன்படுத்திய ஆய்வுகளிலும் சோயா சாப்பிடுவதை நிறுத்தியதும், உடனடியாக ஹார்மோன் அளவுகள் சீரானதும் தெரிந்தது.தினசரி புரதத்திற்கு சோயா மிகச் சிறந்த உணவு. வாரத்திற்கு இரண்டு முறை சோயா சாப்பிடுவது நல்லது.ஆர்.வெங்கடேஷ்,ஊட்டச்சத்து நிபுணர், சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், காரைக்குடி.